பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சங்ககாலத் தமிழ் மக்கள்

களையே பாயலாகப் பயன்படுத்துவார்கள் ; சிறு குடிலின் புறத்தே முள்வேலியிட்டுப் பசு முதலியவற்றைக் காவல் செய்வார்கள்; அரிசிச் சோற்றைப் பாலுடனே உண்பார்கள் ; பசுக் கூட்டத்துடனே காட்டில் தங்கித் தீக்கடை கோலாலே துளையிட்டுச் செய்த புல்லாங்குழலையும் குமிழங் கொம்பினை மரல் நாரினாற்கட்டிச் செய்த வில் யாழினையும் இசைத்து மகிழ்வார்கள்.

மருத நிலத்தார் உழவராவர். நிலத்தை ஏரால் உழுது, எருவிட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைக்கும் உழவுத் தொழில் இந்நிலமக்களது தொழிலாகும். இத்தொழில் ஊராண்மையாகிய ஆள்வினைத் திறத்தை வளர்த்தது. சிறிய நிலப் பகுதியில் நிறைந்த உணவுப் பொருள்களை விளைத்து மக்களைப் பசிப் பிணியின்றி வாழச் செய்தது இவ்வுழவேயாம். ஒரு பெண் யானை படுத்திருக்கும் அளவுடைய சிறிய நிலத்தில் ஆண்டொன்றுக்கு ஏழு ஆண் யானைகளை உண்பித்தற்குப் போதுமான நிறைந்த நெல்லை விளைவிக்கும் திறமுடையவராகத் தமிழ் நாட்டில் வாழ்ந்த உழவர்தம் தொழிற்றிறத்திற் சிறந்திருந்தனர். புதுப்புனலாடுதல் இவர்களுக்குச் சிறந்த திருவிழாவாகும்.

நெய்தல் நிலமக்களாகிய பரதவர், கடலிற் படகிற் சென்று மீன் பிடிப்பர் : திமிங்கில்ம் என்னும் பெரிய மீனை எறியுளியால் எறிந்து கொல்வர் ; பிடித்த மீன்களை உலர்த்திப் பக்குவஞ் செய்து விற்பர்; கடல் நீரைப் புன்னிலங்களிற்பாய்ச்சி உப்பு விளைப்பர். நெய்தல் நிலமகளிர் உப்பை விற்று, அதற்கு மாறாக நெல்லை விலையாகப் பெறுவர். உப்பு விற்பார், உமணர் எனப்பட்டனர். கடலில் பெரிய மரக்கலங்களைச் செலுத்தி வெளிநாடு சென்று வாணிகஞ்செய்யும் முறை இந்நெய்தல் நில மக்களால்