பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

53

வளர்க்கப்பெற்றதேயாம். மீன் பிடிக்கும் சிறு படகுகளிலே சென்று கடலிலே வாழும் இயல்புடைமை கருதி இவர்களைக் கடல் வாழ்நர் என வழங்குதல் வழக்கம். கடலிற் கிடைக்கும் மீன்களையே இன்னார் பெரிதும் உணவாகப் பயன்படுத்துவர். கடலில் மீன் வேட்டையாடுதலையே தொழிலாகக் கொண்ட பரதவர், உவா நாளில் அத்தொழிலிற் செல்லாமல், தத்தம் மகளிரோடு சுறவுக் கோடு நட்டுத் தம் தெய்வத்தை வணங்கிப் புனல் விளையாடி உண்டு மகிழ்வர்.

இவ்வாறு கநிலமக்கள் பலரும் ஒன்று சேர்ந்து தொழில் புரிந்து மகிழும் இவ்வாழ்வு, பின்னர் நாடு முழுதும் ஒரு குடும்பமாக எண்ணும் அரசியல் வாழ்வுக்கு அடிப்படையாயமைந்தமை கருதற்பாலதாம்.

உள் நாட்டு வணிகர்க்குத் தீங்கு நேராதபடி தரைப் படையனுப்பிப் பாதுகாத்தலும், கடலிற்கலஞ் சிதைக்கும் கொள்ளைக்கூட்டத்தாரைக் கடற்படையால் பொரு தழித்தலும் அக்காலத் தமிழ் வேந்தர் காவல் முறையாகும். கடலில் நாவாய் செல்லுதற்குத் துணை செய்யும் காற்றின் பருவநிலையினை நன்குணர்ந்து அக்காற்றின் ஏவலாற் கடலிற் கப்பல்களைச் செலுத்தும் பயிற்சி முறையினைச் சோழர் குடியிற்றோன்றிய மன்னன் ஒருவன் உய்த்துணர்க் தான்.

“நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட உரவோன்.”

என அம்மன்னனைப் புலவரொருவர் போற்றுகின்றார். கடலிற்கப்பலைச் செலுத்துவார், இரவில் துறையறிந்து சேர்தல் கருதிச் சிறந்த துறைமுகங்களில் கப்பலை அழைக்கும் பெரிய விளக்குகள் உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்-