பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

55

ஒட்டி நிகழ்வனவாம். இளவேனிற்காலத்து இன்பவுணர்ச்சியைத் தூண்டுந் தெய்வமாகிய காமனை வழிபட்டு உண்டாடி மகிழ்தல் காமவேள் விழாவாகும். இவ்விழா, ‘வேனில் விழா’ எனக் குறிக்கப் பெற்றது. இவ்விழாவின் போது மகளிரும் மைந்தரும் இளமரச் சோலையிலும் நீர்த்துறையிலும் தங்கி விளையாடி மகிழ்வர். பூக்கள் நிறைந்த பெருந்துறையிலே பகற்பொழுதிலே மைந்தரும் மகளிரும் கூடி ஆடலும் பாடலுங் கண்டும் கேட்டும் இளவேனிற் செவ்வியினை நுகர்ந்து மகிழ்வர் ; இரவில் நிலா முற்றத்திலே வெண்ணிலவின் பயன் துய்த்து இன்துயில் கொள்வர்; காவிரி வையை முதலிய யாறுகளிற் புது வெள்ளம் வருங்காலத்துப் புதுப்புனல் விழாக் கொண்டாடுவது வழக்கம். இவ்விழாவில் புனல் தெய்வத்தை வழிபட்டு நீராடி மகிழ்தல் அரசரது இயல்பாகும். ஆறுகளில் மூங்கிலாற் கட்டப்பெற்ற புணைகளில் மகளிருடன் அமர்ந்து புனல் விளையாடுவர்.

இளவேனிற்காலத்துப் புலவர் பேரவை கூடும். அங்கு எல்லா மக்களும் வந்திருந்து புலவர் நாவிற் பிறந்த இலக்கியச் சுவை நலங்களை நுகர்ந்து மகிழ்வார்கள். இளமாணவர்களைப் போர் முறையில் பயிற்றும் வில்விழா ஊர்தோறும் கொண்டாடப் பெற்றது. முருகனை வணங்கி மக்கள் கொண்டாடும் வெறியாட்டு விழாவும், கொற்றவையை வழிபடும் வெற்றி விழாவும், திருமாலை வணங்கிச் செய்யும் திருவோண விழாவும், கார்த்திகை விளக்கீடும், பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானை வழிபடும் திருவாதிரை விழாவும், தைத்திங்களில் குளநீர் விளையாட்டும், மாசிக் கடலாட்டும், பங்குனி விழாவும் அக்காலத் தமிழ் மக்கள் கொண்டாடிய திங்கள் விழாக்களாம். இவை-