பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சங்ககாலத் தமிழ் மக்கள்

வாழ்த்தின்புறுவதே இம்மையின்பமாகும். ‘இப்பிறப்பிற் பலர்க்கும் வேண்டுவனவற்றை வரையாது கொடுத்து மகிழ்ந்தும் செயற்கருஞ்செயல் செய்து உயிர்கொடுத்தும் புகழ் கொண்டார், புலவர்பாடும் புகழுடையராய்த் துறக்கவுலகாகிய வானுலகிற் புகுந்து இன்பம் நுகர்வர்’, என்பது தமிழர் துணிபாகும். கணவனும் மனைவியும் அன்பினால் மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்து, நுகரவேண்டிய இன்பங்களையெல்லாம் நன்கு நுகர்ந்து, முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயன். இவ்வாறு ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத்தீர்தல் ‘காமம் நீத்தபால்’ எனச் சிறப்பிக்கப்படும். மிக்க காமத்து வேட்கை நீங்கிய கணவனும் மனைவியும் வீடு பேற்றினை விரும்பிப் பற்றற வாழ்தல் துறவு நிலையாகும். இத்துறவினை ‘அருளொடு புணர்ந்த அகற்சி’ என்பர் தொல்காப்பியர். கணவனை யிழந்த மகளிர் உடனுயிர் நீத்தலும், அவ்வாறு இறவாதவர் தாபதநிலையினராய்க் கைம்மை நோன்பு மேற்கொண்டு உணவினைக் குறைத்துண்டு உயிர்வாழ்தலும் தமிழர் வழக்கமாகும். இவ்வாறே மனைவியை இழந்தவன் தவநிலை மேற்கொண்டு துறவு நெறியில் நிற்றலும் உண்டு. ‘மனைவி மக்களைப் பிரிந்து காடடைதலே துறவு’, என்னும் பிற்காலக் கொள்கை தமிழர்கட்கு உடன்பாடன்றாம். பற்றற முயன்று முழுமுதற் பொருளாகிய செம்பொருளை உண்மையாலுணர்ந்து வழிபட்டுத் தெளிவு பெறுதலே தமிழர் சிறந்தது பயிற்றும் வாழ்க்கை நெறியாகும். இந்நெறியில் ஆடவர் மகளிர் இரு பாலாரும் ஈடுபட்டுப் பிறப்பறுத்தற்குரியரென்பது தமிழரது சமயக்கொள்கையாகும். இவ்வுயர்ந்த நெறியினை விரும்பித் தமிழ் வேந்தர்கள் தங்கள் அரச பதவியை விடுத்துத் துறவுமேற் கொண்டார்கள். இச்செய்தியினைக் ‘கட்டில் நீத்த பால்