பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடவர் நிலை

71



கோப்பெருநற்கிள்ளி’ என்னும் பெயரால் அவன் வழங்கப் பெற்றான். அவனால் நடத்தப்பட்ட போர்ப்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்களுக்கு மற்போரும் விற்போரும் பயிற்றப்பட்டன. அங்குப் பயிலும் இளைஞர்கள் வெளியூர்களுக்குச் சென்று ஆங்காங்கே பயிலும் போர்வீரர்களுடன் போர்த்துறையில் போட்டியிடுவதனைத் தங்கள் விளையாட்டாகக் கொண்டார்கள்.

பெருநற்கிள்ளி இளைஞனாய் இருந்தபொழுது சோழ நாட்டின் புறத்தேயுள்ள ஒரூரிற் போர்விழா நிகழ்ந்தது. பெருநற்கிள்ளி அவ்விழாவிற் கலந்துகொண்டு தனது போர்த்திறத்தைப் புலப்படுத்தி, மக்களுக்கு அத்துறையில் ஆர்வமுண்டாக்க எண்ணினான்; தானும் போர் விழாவிற் கலந்துகொள்ள வருவதாக அவ்வூர் மக்களுக்கறிவித்தான். ஊர்மக்கள் அவனது வருகையைப் பெரும் பேறாகக் கருதி, அன்புடன் வரவேற்றார்கள். அவ்வூரில் 'பெருங்கோழி நாய்கன்' என்னும் வணிகன் மகளாராகிய ' நக்கண்ணையார்' என்னும் இளநங்கையார், கன்னிமைப் பருவத்திலேயே தமிழிற் பெரும்புலமை பெற்று விளங்கினார். நல்லிசைப் புலமை நிரம்பிய அங்நங்கையார், போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் பேராற்றலைக் கேள்வியுற்று அவன்பால் அன்பு மீதூரப் பெற்றவராதலின், தம்மூரில் நிகழும் போர்விழாவில் தம் வீட்டின் முன்றிலின் ஒருபால் ஒதுங்கி நின்று, விளையாட வந்த பெருநற்கிள்ளியைக் கண்டு மகிழ்ந்தார்.

நக்கண்ணையார் வாழும் வீட்டின் எதிரேயுள்ள அகன்ற மணல்வெளியிலேதான் போர்விழா நிகழ்தற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உரிய காலத்தே இளைஞர்களும் பொதுமக்களும் திரளாகக் கூடியிருந்தார்கள்.