பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சங்ககாலத் தமிழ் மக்கள்


பெருநற்கிள்ளியின் தோழர்களாகிய வீரர்கள் ஒருபுறமும் அவ்வூரில் வாழும் போர்வீரர்கள் மற்றொரு புறமும் அவ்வூரில் வாழும் போர்வீரர்கள் ம்ற்றொரு புறமும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றார்கள். இரு திறத்து வீரர்களும் தாங்கள் கற்று வல்ல போர்த்திறங்களை மேன் மேலும் விளங்கக் காட்டினார்கள். அவர்கள் எல்லாரைக் காட்டிலும் பெருநற்கிள்ளியே தன் போர்த்தொழிற்றிறனை மிகுதிப்படுத்தி விளையாடினான். அதனைக் கண்டு மகிழ்ந்த சான்றோர்,' பெருநற்கிள்ளியே வென்றான் !’ எனப் பெருக ஆரவாரம் செய்தனர். எந்தவூரிலும் உண்மையை மறைத்துப் பேசும் மக்கள் இருப்பது இயல்புதானே? அத்தகைய மக்கள் அப்போர்விழாக் கூட்டத்திலும் இருந்தார்கள். வெளியூரினின்று வந்த பெருநற்கிள்ளியின் வெற்றியை வெளியிடாது மறைத்தல் வேண்டுமென்பது அவர்களது விருப்பம். அவ்விருப்பத்தால், 'பெருநற்கிள்ளி வென்றானல்லன்' என அன்னார் ஆரவாரஞ் செய்வாராயினர். இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட நிகழும் ஆரவாரத்தைக் கேட்ட நக்கண்ணையார், காலிலணிந்த சிலம்புகளார்ப்ப வீட்டினின்றும் வெளிவந்து, தம் வீட்டு முகப்பிலே நின்ற பனையின் தூரிலே ஏறி நின்று, போர்விழா நிகழ்ச்சியை எட்டிப் பார்த்தார். தம்மால் அன்பு செய்யப்படும் பெரு நற்கிள்ளியே வென்றதை நேரிற்கண்டு தெளிந்தார். இம்மகிழ்ச்சியின் விளைவாகப் போரவைக் கோப்பெருநற்கிள்ளியை அவர் வியந்து போற்றிய பாடலொன்று புறநானூற்றிற் காணப்படுகின்றது (புறம். 85).

கடற்கரையிலே வாழும் பரதவர்கள் தங்கள் உடல் வலியினைப் பெருக்கிக் கொள்ளக் கருதிப் போர்ப்பயிற்சிக்குரிய முரண்களரியினை அமைத்துக்கொண்டார்கள். அதன்கண் பழகிய வீரர்கள், மணல் பரந்த வெளியிலே