பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சங்ககாலத் தமிழ் மக்கள்

வழியொழுகும் ஒழுங்குமுறையினை அறிவுறுத்தி நிலமும் பொருளுந் தந்து ஆதரித்தலைத் தமிழ் வேந்தர் தம்முடைய கடமையாக மேற்கொண்டனர். வீரவாழ்வு வாழ்தற்குரிய சூழ்நிலையினையுடைய தமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்த மறவர்கள், போர்க்களத்திலே பகைவர் சேனைகளை அறவே சிதைத்து, யானைப் படையைக் கொன்று, வெற்றியுடன் மேம்படுதலையே தங்கள் கடமையாகக் கருதினார்கள்.

புதல்வர்களுக்குரிய கடமையாகச் சொல்லப்பட்ட போர்த்துறையில் தமிழ்நாட்டிற்பிறந்த எல்லா இளைஞர்களும் கலந்து பயின்றார்கள். இளைஞர்கள் தங்கள் நாட்டின் கலங்கருதிப் பகைவரை எதிர்த்தல் கடன் என்பது தமிழ்மக்களாற் கருதப்பெற்றது. ஆடவர் ஒவ்வொருவரும் தத்தம் இளமைப் பருவத்தில் போர்ப்பயிற்சி பெற்றுத் தமிழ்ப்படை வீரராய் விளங்கினர். அவர் எல்லாரும் அமைதியான காலத்தில் உழவு முதலிய தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்துவர்; போர்க் காலங்களிற் படையிற்சேர்ந்து பணியாற்றுவர்; தம் போர்த் திறமையொன்றே கருதி நாட்டு மக்களிடம் தவறாக நடந்துகொள்ளாமல், யாவரிடத்தும் பணிவாக நடந்து கொள்வர்.

பகைவேந்தரைப் போரிற் கொல்லும் பேராற்றல் பெற்ற வீரன் ஒருவன், போரில்லாத அமைதிக் காலத்தில் உழுது பயிர்செய்யுந் தொழிலை மேற்கொண்டிருந்தான். இத்தொழிலைச் செய்யுங்காலத்துத் தன் குடும்பத்தைப் பாதுகாத்தற்குரிய உணவில்லாமையால், தன்னுார் மக்களிடம் உணவுக்குரிய தானியங்களைக் கடனாகப் பெற்றிருந்தான். அவனுடைய வயலில் வரகு முற்றி விளைந்தது. வர-