பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

I

தமிழகம்

மக்களாற் பேசப்படும் மொழிவழக்கினைத் துணையாகக் கொண்டுதான் ஒரு நாட்டின் எல்லை வரையறுக்கப்படும். அவ்வாறே நம் தமிழ்நாடும் தமிழ் வழங்கும் நிலத்தை வரம்பாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட எல்லையினையுடையதாகும். தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவர் ‘தமிழர்’ என வழங்கப்பெறுவர். தமிழர் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் நிலப்பரப்புத் ‘தமிழகம்’ எனப்படும். தொல்காப்பியனார் காலத்தில் வடக்கே வேங்கட மலைத் தொடரும், தெற்கே குமரியாறும், மேற்கும் கிழக்கும் கடலும் தமிழ் நாட்டின் எல்லையாய் விளங்கின. இவ்வெல்லைகளே வரையறுக்கும் வேலியாய் அமைந்தது, தமிழர்களாற்பேசப்பெற்றுவரும் தமிழ் மொழியே யாகும்.

தமிழ்மக்கள் பண்டைநாளில் நாவலந்தீவு முழுவதிலும், உலகில் வெளியிடங்களிலும் பரவி வாழ்ந்தார்கள். ஆயினும், அவர்தம் தமிழ்மொழி சிதையாது வளர்ந்து சிறத்தற்கு நிலைக்களமாய் விளங்கும் இடம், வடக்கே வேங்கடமலைத் தொடரையும் தெற்கே குமரியாற்றையும் எல்லையாகவுடைய தமிழகமேயாகும். வேங்கடத்தின் வடக்கேயுள்ள நிலப்பகுதிகளில் ஆங்காங்கே தமிழ்மொழி பேசப்பட்டதெனினும், அவ்விடங்களில் வழங்குங் தமிழ் சிதைந்து மாறுபட்டதனால், அந்நாடுகளைத் தமிழ் கூறும் நல்லுலகமாகத் தமிழ்ச் சான்றோர் கருதவில்லை. வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட நிலப்பகுதியே தொன்று தொட்டுத் தமிழகம் என வழங்கப்பெறுவதாகும். நிலத்தின் இயற்கைக்கு ஏற்பத் தமிழ்மொழி வளர்ந்து சிறத்-