பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

85

தோன்றும் நடுக்கம் அச்சமாகும் தம் பெண்மைத் தன்மைக்குப் பொருந்தாத புறச் செயல்களில் ஒதுங்கி ஒழுகுதல் நாணமாகும். உலகியற் பொருள்களின் இயல்பினைப் பிறர் அறிவிக்க அறிந்து தம் அறிவால் மேற்கொண்ட கொள்கையினை நெகிழ விடாது போற்றுதல் மடனாகும். பெண்களுக்கு இயல்பாக அமைந்த இக்குணங்கள் அவர்கள் வாழ்க்கையில் மேன்மேலும் உறுதிபெற்று வளர்வனவாம். தன்னை மணந்துகொண்ட தலைவனுக்கு எத்தகைய தீங்கும் நேர்தலாகாது எனத் தலைமகளிடத்தே தோன்றிய அச்சம், அவள் தன் கணவனிடத்தே வைத்த அன்புகாரணமாகப் பிறந்ததாகும். அறிவும் ஆண்மையும் சால்பும் பெற்ற ஆடவனொருவனைக் தன் ஆருயிர்த் தலைவனாகக் கருதி மணந்துகொள்ள விரும்பிய வழி, அவன்கண் உள்ளம் ஒன்றி அடங்கி யொழுகுதல், காமக் குறிப்பினால் தோன்றிய நாணமாகும். அவனொருவனையே வழிபடுதல் வேண்டும் எனத் தான்கொண்ட கொள்கையை நெகிழாது கடைப்பிடித்தல் கற்பாகும். தன் கணவனே தெய்வமெனக் கருதி மனஞ்சலியாது ஒழுகும் உள்ளத் திண்மையே கற்பெனப்படும். தனக்குச் சிறந்தான் ஒருவனையே தன் உயிர்த் துணைவனாகக் கடைப்பிடித்தொழுகும் உறுதியுடையவளே 'ஒருமை மகள்' எனப் போற்றப் பெறுவள். அயலானொருவனது விருப்பிற்கிணங்கித் தன் உள்ளத்துறுதியினை நெகிழ விட நினைத்தல் கலக்கமாகும். இங்ஙனம் மாறுபட்டுக் கலங்குதல் உள்ளத்திண்மையில்லாத இழிந்த மகளிரின் செயலாகும். கலங்கா நிலையாகிய கற்பென்னும் திண்மையுடைய மகளிரே பெண்டிர் என மதித்துப் போற்றுதற்குரியவராவர்.

தம் பெண்மைத் தன்மையின் இயல்பினை அழியாது காத்துக்கொள்ளுதலும், தம் கணவரைப் பேணி அவர்