பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

சங்ககாலத் தமிழ் மக்கள்

சொல்வழி அடங்கியொழுகுதலும், தம் இருவரிடத்தும் அமைதற்குரிய நன்மை நிறைந்த புகழினை நீங்காமற் பாதுகாத்தலும் பெண்டிர்க்குரிய கடமைகளாம்.

தமிழ் மக்கள் வீரத்தை விளைத்தற்கென ஆண்பிள்ளைகளைப் பெற விரும்பியது போலவே, அன்பும் அருளும் ஆகிய மனப் பண்பினை வளர்த்தற்குரிய பெண்மக்களையும் பெற விரும்பினார்கள். அன்பும் அறிவும் அமைந்த பண்புடைய பெண்மக்களைப் பெறுதலை விரும்பிய மக்கள், அத்தகைய நன் மக்கட்பேற்றினை அருளுதல் வேண்டும் என இறைவனை வணங்கிப் போற்றினார்கள். இச்செய்தி,

“குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்”[1]

என வரும் கபிலர் பாடலால் இனிது புலனாம்.

தம் உடலமைப்பிற்கும் உள்ள இயல்புக்கும் ஏற்ற விளையாடல்களைச் சங்ககாலத் தமிழ் மகளிர் மேற்கொண்டிருந்தனர். மணலிற் சிறு வீடு கட்டுதல், கழற்சிக்காய் அம்மனைக்காய் முதலியவற்றைக் கையாற்பிடித்து ஆடுதல், பறவை உயர்ந்து பறக்குமாறு போல உந்தி பறத்தல், பந்தாடுதல், ஊசலில் ஏறியாடுதல், பூக்கொய்தல், புனல்விளையாடல் முதலியன மகளிரின் இளம்பருவ விளையாட்டுக்களாம். மேற்குறித்த விளையாடல்கள் யாவும் மகளிர்க்கு உடலில் திண்மையினையும் உள்ளத்து எழுச்சியினையும் தந்து, அவர்தம் உடல் நலத்தினை நன்கு பாதுகாப்பனவாம். இவ்விளையாடல்களின் இன்றியமையாமையினை உணர்ந்த பெற்றோர் தம் மகளிரை நன்றாக விளையாடி மகிழும்படி வற்புறுத்தினர். விளையாடும் மகளிர் கூட்டம் ஆயம் என்னும் சொல்லாற் குறிக்கப்பட்டது. வீட்டின் புறத்தே போந்து விளையாடும் பருவத்து இளமகளிர், தம்


  1. ஐங்குறு நூறு, 257.