பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

87

தோழியர்களுடன் கூடி விளையாடி மகிழாது, வீட்டின் கண்ணே அடைபட்டிருத்தல் அறனும் ஆகாது; அவர்கள் உடலின் ஆக்கத்தையும் சிதைப்பதாகும்’, என அறிஞர் பலரும் அறிவுறுத்தினர். அதனால், இளமகளிர் எல்லாரும் புதுப்புனலாடியும், பூக்கொய்தும், மாலை முதலியன தொடுத்தணிந்தும் விளையாடி மகிழ்ந்தனர்.

விலங்கினின்றும் மக்களை வேறு பிரித்து உயர்த்துவது கல்வி, அத்தகைய கல்வியை ஆடவர் பெண்டிர் ஆகிய இருபாலாரும் பயிலுதல் வேண்டும் என்பது பண்டைத் தமிழ் மக்களின் கொள்கையாகும். உருவும், திரு வும், அறிவும் முதலியவற்றால் தம்மோடு ஒத்த தகுதி வாய்ந்த மகளிரையே தமிழிளைஞர் மணந்து கொண்டனர். பெண்டிர் கல்வி பயிலுதற்கு உரியரல்லர் என்னும் பிழை பட்ட கொள்கை தமிழறிஞர்க்கு உடன்பாடன்றாம். அடக்கமும், அமைதியும், மனங்கோடாமையும், நன்றும் தீதும் பகுத்துணரும் நல்லறிவும், ஆராய்ந்துணர்தற்கு அரிய அருமைப் பண்பும் பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளாகுமெனப் பண்டைத் தமிழாசிரியர் வரையறுத்துக் கூறியுள்ளனர் [1]. இப்பண்புகள் யாவும், நிறைந்த கல்விப் பயிற்சியுடைய சான்றோர்கணல்லது ஏனைய பொது மக்களிடத்தே காணப்படாத அருமையுடையனவாகும். ஆகவே, மேற்குறித்த அருமைப் பண்புகளுக்கெல்லாம் நிலைக்களமாய் விளங்குதற்குரிய பெண்டிர், ஆடவர்களைப் போன்று நிறைந்த கல்வியுடையராதல் வேண்டுமென்பது தமிழ் முன்னோர் கொள்கையாதல் நன்கு விளங்கும்.

ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலார்க்கும் கல்வி பொதுவாயினும், ஆடவர் கல்வி பயிலும் முறை வேறாக

  1. தொல்காப்பியம், பொருளியல், 14