பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சங்ககாலத் தமிழ் மக்கள்

வும், பெண்டிர் கல்வி பயிலும் முறை வேறாகவும் முன்னையோர் வகுத்திருந்தனர். பொருளீட்டலும், போர் செய்தலும், நாடு காத்தலும் முதலிய புறத்துறைக்குரிய முறையில் ஆடவர் கல்வி பயின்றனர். மனை வாழ்க்கையினை நடத்தலும், அன்பினால் மன அமைதியை வளர்த்தலும் ஆகிய குடும்பப் பணியினை நிகழ்த்தற்கு ஏற்ற முறையில் மகளிர் தம் வீட்டிலிருந்தே கல்வி பயின்றனர். அவர்கள் பயின்ற கல்வி வாழ்வாங்கு வாழும் பயனுள்ள கல்வியாய் அமைந்திருந்தது. உலகியற்பொருள்களின் இயல்பினையும் உயிர்களின் உள்ளத்துணர்ச்சிகளையும் உள்ள்வி உய்த்துணரும் நுண்ணறிவு பெண்களின் தனியுரிமையாகும்.

சங்ககாலத் தமிழ் மகளிர், இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்த் துறையிலும் சிறந்த புலமை பெற்றுத் திகழ்ந்தனர். இளம்பருவத்திலேயே உயர்ந்த புலமை பெற்று விளங்கிய நல்லிசைப் புலமை மெல்லியலார் பலர், பண்டைநாளில் வாழ்த்தனர். அவர்களுடைய அறிவுரைகளைச் செவிமடுத்த தமிழ் வேந்தர்களும் பொதுமக்களும் அவர்கள் அறிவுறுத்திய நன்னெறியிலே அடங்கியொழுகினார்கள். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள சங்கத்தொகை நூல்களில் ஐம்பதின்மர்க்குக் குறையாத பெண்பாற்புலவர்கள் பாடிய செய்யுட்கள் காணப்படுகின்றன. காக்கை பாடினியார் என்னும் பெயருடைய பெண்பாற் புலவர் இருவர் தமிழுக்குச் சிறந்த யாப்பிலக்கண நூல்களை இயற்றியுள்ளனர் [1]."


  1. காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம் என வழங்கும் யாப்பியல் மேற்கோட் சூத்திரங்கள் இவ்வுண்மையினைப் புலப்படுத்தும்.