பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

89



இசைப்பயிற்சி மகளிர்க்கு இன்றியமையாததாகக் கருதப் பெற்றது. இசை பாடுதற்கு இனிய குரல் படைத்தவர் பெண்டிரேயாவர். இசைத்தமிழை வளர்த்தலில் ஆடவரைக்காட்டிலும் பெண்டிரே முதலிடம் பெற்றனர். யாழ் இசைத்தல், குழலூதுதல், தண்ணுமை (மிருதங்கம்) வாசித்தல் முதலாகக் கருவியாற்செய்யும் இசைத்தொழிலிலேயே ஆடவர் பயிற்சி பெற்றிருந்தனர். ஆடவரின் மிடற்றோசையைக்காட்டிலும், மகளிரது குரலே செவிக்கு இனிமை தருவதாகும். ஆதலால், கண்டத்தாற்பாடுக் தொழிலிற் சிறந்த பயிற்சியினைப் பெறுதல் மகளிர்க்கு வாய்ப்புடைய செயலாயிற்று. இசைத்தமிழில் வல்ல மகளிர் தம் இசையின் இனிமையினால் யானை முதலிய வலிய விலங்குகளையும் அடக்கியாளும் திறம் பெற்றிருந்தனர்.

மலைவாணர் மகளிர் தினைப்புனத்திலே தங்கிக் கிளி முதலியவை தினையை உண்ணாதபடி ஓட்டுவது வழக்கம். இரவுப் பொழுதிலே பரண்மீதமர்ந்து புனம் காக்குங் கானவனொருவன், கள்ளுண்ட களிப்பால் மயங்கி உறங்கினன். அந்நிலையிலே இளங்களிறொன்று தினப்புனத்திற் புகுந்தது. அதனையுணர்ந்த அவன் மனவியாகிய கொடிச்சி தன் மணங்கமழுங் கூந்தலைக் கோதிநின்று இரவிலே பாடுதற்கு ஏற்ற குறிஞ்சிப் பண்ணினை மிகவும் இனிமையாகப் பாடினாள். அமிழ்தென இனிக்கும் அவ்வின்னிசையினைச் செவி மடுத்த இளங்களிறு, தான் விரும்பி வந்த தினைக் கதிரையும் உண்ணாமல், தினைப் புனத்தினை விட்டுத் திரும்பிச் செல்லுதலையும் நினையாமல், எப்பொழுதும் எளிதில் மூடப்பெறாத தன் கண்கள் மூடுதலைப் பெற்று, நின்ற நிலையினின்றும் பெயராமல் உறங்கியது, என்ற செய்தி அகநானூற்றுப் பாடலொன்றிற் குறிக்கப்படுகின்றது. இக்-