பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தது. அப்படி அது பார்ப்பதைத் தங்கமணி மனத்திற்குள்ளாகவே நன்கு ரசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த வண்டிக்காரனும் எப்படியாவது கூடவே இருந்து இவற்றையெல்லாம் கேட்பதைத்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு இதில் ஏன் இவ்வளவு அக்கறை? ஒரு சமயம் கிராமப்புற மக்கள் இப்படித்தான் இருப்பார்களோ?

“வண்டிக்காரா, நீ போய் உன் வேலையைக் கவனி” என்று தங்கமணி ஒரு சமயம் சொன்னான்.

“எனக்கு இன்றைக்கு வேலையில்லை - எனக்கும் கதை கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது” என்று அந்த வண்டிக்காரன் பணிவோடும் கெஞ்சுவது போலவும் பதில் அளித்தான்.

“ஏன், நீ இந்த ஊருக்குப் புதிதா? இந்த ஊர்க்காரனாக இருந்தால் முன்பே இந்த விவரமெல்லாம் தெரிந்திருக்குமே?” என்று தங்கமணி திடீரென்று கேட்டான்.

வண்டிக்காரன் பதில் சொல்வதற்கு முன்னால் யாரோ ஒருவன் “ஆமாம், அவன் புதியவன்தான். இந்தப் பக்கத்து ஆளே இல்லை. கொஞ்ச நாளுக்கு முன்புதான் இங்கு வேலைக்கு வந்திருக்கின்றான். கதை கேட்பதிலே அவனுக்கு ரொம்ப ஆசை. எல்லாருக்கும் அப்படித்தான்” என்று தெரிவித்தான்.


[6]

கலந்துரையாடல்!

“மலைமேல் ஏறுவதற்கு முன்னால் சங்ககிரியைச் சுற்றி ஆராய்வது நல்லது” என்று தங்கமணி ஒரு நாள் இரவு மற்றவர்களிடம் சொன்னான்.

17