பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அம்மனுக்குப் பின்னலே சுரங்கப் படிகள் இருக்கின்றன. அவை எங்கு போகின்றனவென்று யாருக்குமே தெரியாது. ஆனால் திப்புசுல்தான் கோட்டையில் உள்ள குகைக்கும் இதற்கும் வழியுண்டு என்று எங்கள் பாட்டனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றான் பூசாரி.

“நான் அங்கே இறங்கிப் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான் தங்கமணி.

“ஐயோ வேண்டாம். அதற்குள்ளே கருவண்டுகள், பாம்புகள் எல்லாம் உண்டு” என்று பூசாரி சட்டென்று பதில் சொன்னான்.

“இந்தச் சுரங்க வழியில் தான் எங்கேயோ திப்புசுல்தான் புதையல் இருக்கிறதாமே?” என்று மேலும் கேட்டான் தங்கமணி.

“ஆமாம் - அதெல்லாம் ரொம்ப ரகசியம். காட்டு மாரியம்மன் அதற்குக் காவல் தெய்வம். அதனாலேதான் இந்த தேவதை சக்தியுள்ள தெய்வமாக இருக்கிறது” என்றான் பூசாரி.

பூசாரிக்கு அவன் எதிர்பார்த்ததற்கு மேல் தட்சிணை கொடுத்துவிட்டு எல்லாரும் பாட்டி வீட்டை நோக்கித் திரும்பினர்கள். ஜின்கா பூசாரி கொடுத்த வாழைப்பழத்தை இரண்டு கன்னத்திலும் அடக்கிக் கொண்டு புறப்பட்டது. பழம் கிடைத்ததுபற்றி அதற்கு அளவில்லாத மகிழ்ச்சி.

வரும்போதே இருட்டி விட்டது. நல்ல வேளை, சுந்தரம் தன்னுடைய டார்ச் விளக்கைக் கொண்டு வந்திருந்தான்.

22