பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பெரிய பெரிய பாராங்கல்லை யெல்லாம் வைத்து எப்படித்தான் இந்தச் சுவர்களைக் கட்டினார்களோ?” என்று கண்ணகி ஆச்சரியப்பட்டாள்.

“ஆங்கிலேயரை இந்த நாட்டிலிருந்து விரட்டி விடவேண்டும் என்று திப்புசுல்தான் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய துணிச்சலுக்கும் வீரத்திற்கும் எல்லையே இல்லை. இருந்தாலும், அவனுடைய எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது” என்று தங்கமணி விளக்கினான்.

வேகமாக மலையில் ஏறி மலையின் மத்திய பாகத்தில் உள்ள குகையை அடைந்தார்கள். ஜின்காவுக்கு மலைமேல் ஏறுவதில் தனிப்பட்ட உற்சாகம்.

சுந்தரம் குகைக்குள் சில அடி தூரம் நுழைந்து பார்க்க முயன்றான்.

“சுந்தரம், முதலில் மலை உச்சிக்குப் போவோம். அங்குள்ளவற்றையெல்லாம் பார்த்து விட்டுத் திரும்பி வரும் போது இந்தக் குகையை ஆராய்வோம்” என்றான் தங்கமணி.

அவன் சொன்னபடியே எல்லாரும் சங்ககிரியின் சிகரத்தை நோக்கி விரைந்தார்கள், அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய மலைச் சரிவு தென்பட்டது. அங்கே கொத்தளங்களை அமைத்து அவற்றில் பீரங்கியை வைத்து சுடுவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

“மலைச் சரிவின் வழியாக விரோதிகள் மேலே வரக்கூடும். அப்படி வந்தால் பீரங்கியைப் பயன்படுத்தலாம் என்று முன் யோசனையோடு செய்திருக்கிறார்கள்” என்று தங்கமணி விளக்கம் தந்தான்.

“அப்பா! இந்த இரும்பு குண்டு எத்தனை கனம்” என்று கண்ணகி கூவினாள்.

25