பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“வேண்டவே வேண்டாம். சண்டையென்றால் எத்தனையோ பேர் சாவார்கள். நமக்குச் சமாதானம்தான் வேண்டும். அப்பொழுதுதான் நமது நாடு” என்று கண்ணகி கூறி முடிப்பதற்குள்,

“சரி, ஆரம்பித்து விட்டாயா உன் பிரசங்கத்தை? நான் ஏதோ தமாஷாகச் சொன்னால்....” என்று இழுத்தான் சுந்தரம்.

“உனக்கு எல்லாம் தமாஷ்தான் - வேறு என்ன தெரியும்?” என்று குத்தலாகப் பேசினாள் கண்ணகி.

“உனக்கு நகைச்சுவை உணர்வே இல்லை என்று தெரியும்” என்று நகைத்தான் சுந்தரம்.

தங்கமணி இவர்கள் பேசுவதைக் கவனிக்கவே இல்லை. அவன் துருதுருவென்று சுற்றிலும் ஆராய்வதிலேயே நாட்டமாக இருந்தான்.

பிறகு அவர்கள் உச்சியில் இருந்த ஒரு சுனையைப் பார்த்தார்கள். அதன் மேல் ஒரு பாறை சுனையின் முக்கால் பாகத்தை மூடுவதுபோலக் கவிந்திருந்தது. அதனால் சுனையில் உள்ள சுத்தமான நீர் குளிர்ச்சியாக இருந்தது. குடிப்பதற்கும் நன்றாக இருந்தது.

அந்த சுனைக்குப் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை அருந்தலானார்கள்.

“கண்ணுப் பாட்டி ரொம்ப ஜோர்; எல்லாம் நன்றாகத் தயார் செய்திருக்கிறாள்” என்றான் சுந்தரம்.

தங்கமணி உணவை வாயில் போட்டுக் கொண்டே ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருந்தான்.

“என்னடா, பெரிய யோசனை? கோட்டையைத்தான் பிடித்தாகி விட்டதே” என்று கேலி செய்தான் சுந்தரம்.

27