பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்கமணி “சுந்தரம், கட்டப்பாறை இருக்கிறதா? இதை நாம் ஆராய்ந்து பார்க்க வேணும்” என்று ஏதோ ஆழ்ந்த யோசனையோடு கேட்டான்.

சுந்தரம் தன் கேலிப் பேச்சையெல்லாம் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினான். “கட்டப்பாறை இங்கு எப்படிக் கிடைக்கும்? நாம் ஊன்றி நடப்பதற்காகக் கொண்டுவந்த கெட்டிபான கல் மூங்கில் கழி இருக்கிறது. அது உபயோகப்படுமா என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டுத் தங்கமணி காட்டிய செங்கல் சுவரை இடிக்க முயன்றாள்.

“அண்ணா , இங்கே ஒரு கல் கிடக்கிறது. அதைக் கொண்டு சுவரை இடிக்கலாமா பார்” என்றாள் கண்ணகி.

தங்கமணி அந்தக் கல்லைக் கொண்டு சுவற்றின் மேல் ஓங்கி ஓங்கி போட்டான். சுந்தரம் மூங்கிற்கழியால் குத்தினான்.

இருவருடைய முயற்சியால் செங்கல் சுவரின் கொஞ்சங் கொஞ்சமாகப் பிளவு உண்டாயிற்று. அந்தப் பிளவுக்குள்ளே, மூன்று மூங்கில் குச்சிகளையும் ஒன்றாகப் புகுத்தி நெம்புகோல் போலப் பயன்படுத்தி மூவரும் சேர்ந்து நெம்பினார்கள்.

செங்கல் சுவர் சுமார் அரை மீட்டர் அகலமிருக்கும். அது பெயர்ந்து தடாலென்று கீழே விழுந்தது.

நல்ல வேளை, மூவரும் குகையின் உள் பக்கத்தில் இருந்தார்கள். அதனால் அவர்கள் மேல் அது விழவில்லை. ஜின்கா மட்டும் மறுபக்கத்தில் நின்று இவர்கள் செய்வதை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தது. சுவர் விழும்போது அது ஒரு தாவுத் தாவித் தப்பிக் கொண்டது.

“ஜின்கா, நீ சுவரின் அடியில் அகப்பட்டிருந்தால் சட்னி ஆகியிருப்பாய். தங்கமணி உயிரையே விட்டிடுவான்” என்று கூவினான் சுந்தரம். அதே வார்த்தைகளை குகை பல முறை எதிரொலித்தது.

32