பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“ஆமாண்டா, அதுதான் நல்ல யோசனை. நீயும் பாட்டியிடம் சொல்லி வந்திருக்கிறாய்” என்று சுந்தரம் ஆமோதித்தான்.

“அதைத்தான் இப்பொழுது முதற் காரியமாகச் செய்யப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஒரு கடிதம் எழுதி ஒரு உருண்டையான சம்புடத்தில் போட்டு ஜின்காவிடம் கொடுத்தான்.

தங்களுக்கு ஆபத்து என்று தெரிந்தால் அவன் ஜின்காவுக்கு ஒரு சமிக்ஞை செய்வான். அது உடனே கண்ணுப் பாட்டியிடம் கொண்டுபோய் அதைக் கொடுக்கும். இவ்வாறு செய்யத் தங்கமணி ஜின்காவைப் பழக்கி வைத்திருந்தான். அவன் சைகை செய்யும் வரையிலும் ஜின்கா கூடவே இருக்கும். பிறகு அவன் சைகைப்படி நடக்கும்.


[14]

முரடர்களுடன் வாக்குவாதம்!

தானியக் கிடங்கில் அந்த நான்கு பேரும் இறங்கும் சமயத்தில் தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அந்த நான்கு பேரில் ஒருவன் வண்டிக்காரன் என்பதும் தெரிந்துவிட்டது.

“ஏண்டா, வண்டிக்காரனாக நடித்து அந்தப் பெட்டியைத் திருடிக் கொண்டு வந்து விட்டாயா?” என்று சுந்தரம் கோபமாகக் கேட்டான்.

வண்டிக்காரன் மௌனமாக இருந்தான்.

“அதைக் கேட்க நீ யாரடா?” என்று மற்ற மூவரில் ஒருவன் அதட்டினான்.

41