பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். கண்ணுப் பாட்டி அந்தக் குழந்தைகளின் அன்பைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ஜின்காவின் குதூகலம் சொல்லி முடியாது. அது குதித்துக் குதித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியது. சுந்தரம் அதனுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிட்டான், மற்ற இருவரும் அவனைப் பின்தொடர்ந்து ஆடினார்கள்.

“கண்ணுகளா, நீங்கள் மூவரும் ஜின்காவோடு இங்கேயே இருந்து விடுங்கள்” என்று இன்ப மிகுதியால் கண்ணுப் பாட்டி தெரிவித்தாள்.

“அதெப்படி முடியும் பாட்டி? கோடை விடுமுறைக்குப் பின் நாங்கள் எங்கள் ஊருக்குச் சென்று படிக்க வேண்டாமா? ஆனால் நீங்கள் அன்போடு ‘கண்ணு’ என்று சொல்வதை நாங்கள் நினைத்துக் கொண்டேயிருப்போம்” என்று குழறிக் குழறி சுந்தரம் சொன்னான்.

“ஆமாம் பாட்டி, நீங்கள் ‘கண்ணு’ என்று சொல்வது எங்களுக்கு அமுதமாக இருக்கிறது. இந்தக் கோமாளி அதே வார்த்தையைச் சொன்னா எப்படியோ இருக்கிறது” என்று கண்ணகி கூறினாள்.

அனைவரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.

“கண்ணுகளா, வாங்க உங்களுக்கு இன்றைக்குத் தனி விருந்து வைத்திருக்கிறேன்” என்று கூறிக் கண்ணுப் பாட்டி அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.

இன்னும் விடுமுறையில் பலநாள் இருந்தன. ஆனால் “உடனே புறப்பட்டுப் போய் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்தச் சம்பவங்களையெல்லாம் நேரில் கூறவேண்டும்” என்றாள் கண்ணகி. தங்கமணியும் அதையே தெரிவித்தான்.

“பாட்டி, உங்களைப் பிரிய மனமில்லாவிட்டாலும் உடனே புறப்பட்டுப் போகத் துடிக்கிறோம்” என்றான் சுந்தரம்.

47