பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“ஆமாப்பா, எங்களை எங்குமே பாட்டி தனியாகப் போக விடவே இல்லை. நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?” என்று தங்கமணி இடையிலே சொன்னான். தங்கமணிதான் எல்லாருக்கும் பெரியவன்; பத்தாம் வகுப்பில் படிக்கிறான்.

தந்தைக்கு விஷயம் விளங்கிவிட்டது, அவர், “அந்தப் பாட்டியைப் போல அல்ல இந்தப்பாட்டி. நீங்கள் கை கால்களை முரித்துக்கொண்டு வந்தாலும், ‘சின்னவயசிலே இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டுக் கவலைப்பட மாட்டாள். ஆனால் வேண்டிய சிகிச்சையை உடனே கவனிப்பாள். இந்தப் பாட்டியின் போக்கே தனியாக இருக்கும்”. என்று அவர்களுக்கு உற்சாகம் வரும்படி பேசினார்.

“அப்பா, சங்ககிரியிலே என்னவெல்லாம் பார்க்கலாம்?” என்று ஆவலோடு கேட்டாள் கண்ணகி.

“அங்கே சங்ககிரி என்ற ஒரு மலை இருக்கிறது. அதிலே திப்புசுல்தான் கட்டிய கோட்டைச் சுவர்களும் உண்டு, அங்கே பல அதிசயங்களைக் காணலாம்” என்ற பதிலைக் கேட்டதும் மூவருக்கும் குஷி பிறந்து விட்டது.

“அப்பா, அங்கே கோட்டைக்குள் போக விடுவார்களா?” இது கண்ணகி.

“திப்புசுல்தான் கட்டிய கோட்டை என்றால் அங்கே சண்டை நடந்ததா?”-- இது தங்கமணி.

“அங்கே பீரங்கிகளெல்லாம் உண்டா?” --இது சுந்தரம்.

இப்படி மூவரும் பதிலுக்குக் காத்திராமல் ஒரே மூச்சில் பேசினார்கள்.

“மூன்று பேரும் ஒரே மூச்சில் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது? எல்லாம் அங்கே போய்த் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சுருக்கமாகப் பதில் கிடைத்தது.

2