பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௫. கீரங்கீரன்

இவர், கீரன் என்பாரின் மகன்; கீரன் எனும் இயற்பெயருடையவர். இத்துணையவே, இவர் குறித்து நாம் அறியத்தக்கன; கீரன் என்ற பெயர் குறித்துக் கூற வேண்டுவன, "நக்கீரர்" என்பார் வாலாறு கூறுமிடத்தே விளங்கக் கூறப்பட்டுள்ளன; ஆண்டுக் கண்டுகொள்க. இவர் பாடிய பாட்டொன்று நற்றிணைக்கண் இடம் பெற்றுளது; "தோழி! தலைவன் தேரிற்கட்டிய மணியின் ஒலி, அதோ தெளிவாகக் கேட்கத் தொடங்கிவிட்டது; மணி ஒலி தோன்றவருதல் களவுக்காலத்தில் நிகழ்வதன்று; ஆகவே அவர் வரைவொடு வருகின்றார் என்பது உறுதி; ஆகவே, இனி நம் துயரெல்லாம் ஒழியும்" எனக் கூறினாள் தோழி என்ற பாட்டில், தலைவன், தான் வளர்ந்து வரும் தேராழி, கழியின்கண் ஆழப் புதைந்தவிடத்தும், அத்தேரை உரங்கொண்டு ஈர்க்குமாறு, துரத்துவான் வேண்டி, அத்தேரிற் பூட்டிய குதிரைகளைக் கோல்கொண்டு தாக்கான்; அத்துணை அன்புடையன் அவன்; மேலும், கோல்கொண்டு தாக்கவேண்டுவ தில்லாமலே, அத்தேரை எத்துணை ஆழமான இடங்களிலும் ஈர்த்துச்செல்லும் ஆற்றல் உடையன அக்குதிரைகள் எனத் தலைவன் அன்பினையும், அவன் குதிரைகளின் ஆற்றலையும் தோன்றச் செய்துள்ளார் புலவர்.

"நோய்மலி பருவரல் நாம் இவன் உய்கம்;
கேட்டிசின் வாழி தோழி! தெண்கழி
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா
வலவன் கோலுறல் அறியா
உரவுநீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே." (நற்: எ.அ )