பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை


பல நூல்களை அச்சிட்டு இலவசமாக வழங்கியும், அறிஞர்களை ஊக்கிப் புதிய துறையில் பல ஆய்வு நூல்களும் கருத்து நூல்களும் தத்துவநூல்களும் வெளிவர உபகரித்தும் வருகின்ற திருவாவடுதுறை ஆதீனம் 21-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் இதனை வெளியிடப் பெருங்கருணை யுடன் ஏற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து மேலும் இதனைச் செவ்வை யாக அச்சிட்டு வருகிறார்கள்.

இத்தொண்டு தொடங்கப்பெற்றுப் பல நாட்களாகியும் இதை அச்சிடுகின்றதில் ஏற்படும் பல சிக்கல்கள் காரணமாக இன்றுதான் உயிர் எழுத்துக்களின் வரிசையை முடித்து, இந்த அகராதியின் முதற்பாகத்தை ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் உலகிற்குத் தம் திருவருள் அடையாளமாகத் தந்து உதவுகின்றார்கள். எஞ்சிய பகுதிகளையும் விரைவில் வெளியிடவேண்டுமென்ற திருவுள்ளத்தையும் தெரிவித்துள்ளார்கள். அவர்களைத் தமிழுலகம் என்றும் நன்றியுடன் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

இந்த அகராதிக்குச் 'சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்' என்ற பெயர் மிகப் பொருத்தமாகும். இந்தக் களஞ்சியத்தில் சொற்களை அல்லாமல் சொல்லுறுப்புகளும் அகராதிவரிசையில் அமைந்துள்ளன. சொல் ஆராய்ச்சிக்கும், தமிழ்மொழி ஆராய்ச்சிக்கும், தமிழ்ச்சொற்களின் பொருள் மாற்றத்தின் ஆராய்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு அடிச்சொல்லின் மாற்று வடிவங்களையும், சந்தி விகாரவடிவங்களையும் இங்கே குறிப்பிட்டுள்ளமையும் கூறுதல்வேண்டும். இது சிறந்த அகராதியின் முடிவான வடிவமென்று நாங்கள் எண்ணிவிடவில்லை. இந்தச் சொற்களஞ்சியம் வெளிவருவதால் மேலும் பலர் இந்தத் துறையில் செய்யும் தொண்டு திருத்தமுறலாம் என்ற எண்ணத்தாலேயே இதனை வெளியிட வேண்டும் என்று நான் வற்புறுத்திவந்தேன். இதனைத் தமிழுலகம் வரவேற்று ஊக்கினால், இந்தத் தொண்டு மேலும் தொடர்ந்து பல வகையில் விரிந்து நடைபெற்று, தமிழுலகிற்கு ஏற்ற தொண்டாக மலர்ந்து கனிந்து பயன்தரும் என்று நம்புகிறேன்.

இந்தத் தொண்டினைச் செய்வதற்கு ஊக்கம் அளித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும், சிறப்பாக இதைத் தொடங்கியபோது உதவிய துணைவேந்தர் திருவாளர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை அவர்களுக்கும் நன்றி.