பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிவமயம்

முகவுரை

சொற்களஞ்சியம் இருந்தால் சோர்வு ஏது? சங்க இலக்கியம் என்ற அரண்மனை எத்தனையாயிரம் சொற்களைக்கொண்டு கட்டப்பெற்றுள்ளது; அவற்றில் காணப்பெறும் சொல்லுருவங்களும் பொருளமைதிகளும் எவ்வெவ்வாறு மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்திருக்கின்றன என்று உறுதியாக அறிய வேண்டும்; அதற்கான சொற்களஞ்சியம் காணவேண்டும் என்ற அவா அடியேனுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு விளைந்தது. பலகாலங்களில் வெளிவந்த இலக்கிய வரலாறுகளையும், இலக்கியக் கட்டுரைகளையும், இலக்கண ஆராய்ச்சிகளையும் படிக்க நேர்ந்தபோது அவைகளில் கண்ட கருத்துக்கள் பல ஊன்றிக் காணத்தக்கனவாக இருந்தன. ஆதலால், இத்தகையதொரு சாதனம் இல்லாமையால் இத்தகைய எழுத்துக்கள் வெளிவருகின்றன; எழுத்தாளர்கள் எத்தனை ஆயிரம் சொற்களை நினைவில்வைத்து எழுதமுடியும்? ஆகவே நல்லதொரு சாதனம் இருந்தால் ஆய்வாளர்களின் ஆழ்ந்த கருத்துப்புதையலை நன்கு பெறலாமே! என்ற ஆசை தோன்றியது; வேர்கொண்டது; தளிர்த்தது; கவடுவிட்டது.

என்னுடைய மாணவர்கள் பலரும் ஏதோ சிறிய ஊதியம் பெற்று உதவினர்; இராப்பகலாக என்னிடமிருந்து எழுதினர்; தொகுத்தனர்; அடுக்கினர்; அதனால் இக்களஞ்சியம் முற்றுப்பெற்றது. இப்பணியை என் ஓய்வுநேர வேலையாக ஏழாண்டுகளாக இயற்றி வந்தேன். ஒருநாள் எமது பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய உயர்திரு. தி.மூ.நாராயணசாமிப்பிள்ளை அவர்களும், சு.நீதிகுமார சட்டர்ஜீ அவர்களும் திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் மாநாட்டிற்குப்போகும்போது என் முயற்சியின் ஒரு பகுதியைப் பார்வையிட்டார்கள். மறு நாளே துணைவேந்தர் அவர்கள், எழுதும் மாணவர் உதவிக்காக மாதம் 25 ரூபாய் விழுக்காடு ஆறு மாதங்களுக்குரிய பணமும், 2 ரீம் காகிதமும் உதவினார்கள். அப்போது உடனிருந்து இப்பணியில் பங்குகொண்டவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்விரிவுரையாளர் புலவர் சோம இளவரசு அவர்கள்.


இந்தவேலை தொடங்கிய நாள்முதல் உடனிருந்து ஊதியம் கருதாது அல்லும் பகலுமாக உழைத்துவந்தவர் சின்னத்தடாகம் நாட்டாண்மைக்கழக உயர்நிலைப் பள்ளியில் இன்று தமிழாசிரியராக இருக்கும் புலவர் மு.சுப்பிரமணியன் அவர்கள். அச்சுவேலை தொடங்கியது முதல் உயிரெழுத்து முடியும் வரை, திருவாவடுதுறை ஆதீன மகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், புலவர் மு.சுப்பிரமணியனுக்கு உணவும் மாதம் எழுபத்தைந்து ரூபாய் ஊதியமும் அளித்துவந்தார்கள். மேலும் இவ்வேலை நடைபெறவும் பொருளுதவி செய்துவருகின்றார்கள்.