பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பெரு, பெரும் என்பன போன்ற சொற்கள் இடச்சூழலுக்கு ஏற்றபடி பிரிக்கப்பட்டுள்ளன. பெருநீர் என்பது பெரு, நீர் என்றும் பெருந்தன், பெருந்துடி என்பன போன்றவை பெரும், தண்; பெரும், துடி எனவும்பிரிக்கப்பட்டுள்ளன. கடு, கடும்; கரு, கரும்; நெடு, நெடும் என்பனவும் இவ்வாறே சூழலுக்கு ஏற்பப் பிரிக்கப்பெற்றுள்ளன.

உறு தரு, வரு போன்ற வினைகள் சேர்ந்துவரும் சொற்கள் ஏமுற்ற, கல்லுறுத்து, ஏய்தருவேம், துயல்வந்து, நயவரும் எனச் சேர்த்தே தரப்பெற்றுள்ளன.

செய்த, செய்கின்ற, செய்யும் போன்ற பெயரெச்சவாய்பாட்டுச் சொற்களுடன் கால், காலை, கடை, பொழுது, தொறும், உழி, அளவை, இடத்து போன்ற காலக்கிளவிகள் இணைந்துவரும் பாராட்டாக்கால், நினைக்குங்காலை, இலங்கடை, கால்கொள்ளும் பொழுது, எறிதொறும், முயங்கியுழி, சொல்லியவளவை, கெட்டவிடத்து போன்றவை கூட்டுவினையெச்சங்கள் என்பதால் அவை கூட்டுச்சொற்களாகவே கருதப்பெற்றுள்ளன.

பொருள்வேறுபாடு இல்லாமல் வரும் இயல்புச் சொற்சேர்க்கை ( Free Combination ), புதிய பொருளில் வரும் மரபுச்சொற்சேர்க்கை (Set Combination ) எனும் இரு நிலையிலும் சொற்கள் வருகையில் அவை இருவேறு நிலைகளில் முறையே பிரித்தும் சேர்த்தும் தரப்பெற்றுள்ளன. சான்றாகக் 'கொடுவரி' என்பது வளைந்த வரி எனும் பொருளில் இயல்புச்சொற்சேர்க்கையாய் வருகையில் பிரித்தும் புலி எனும் பொருளில் மரபுச் சொற்சேர்க்கையாய் வருகையில் சேர்த்தும் தரப்பெற்றுள்ளன.

உம் எனும் இடைச்சொல் பிரித்துத் தரப்பட்டிருந்தாலும் உம் சேர்ந்த சில சொற்கள் பொருளில் வேறுபட்டு வருகையில் அவை சேர்த்தே தரப்பட்டுள்ளன. சான்றாக எனைத்தும் ( சிறிதும் ), அனைத்தும், முழுதும், முழுவதும் ( எல்லாம் ), நாளும் ( தினமும் ), நன்றும் ( மிகவும் ) என வரும் சொற்கள் கூட்டுச்சொற்களாகவே தரப்பெற்றுள்ளன (அடைப்புக்குறிக்குள் உள்ளவை பொருட்சொற்கள்).

இன் சேர்ந்த சில சொற்கள் வினையடைகளாகச் செயற்பட வல்லன. இவ்வாறு வரும் நல்லிதின், தொவ்விதின், மெல்லிதின், வாலிதின் போன்ற சொற்கள் சேர்த்தே தரப்பட்டுள்ளன.