பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சங்க இலக்கியத்தில் உவமைகள்

பொதுவாக வெளிப்படை உவமங்களுக்குப் பொருந்தும் எனலாம். இவற்றை அமைக்கும் பொழுது தொகை உவமம் எனவும், விரி உவமம் எனவும் பிரித்துக் காட்ட இயலும். உவமை உருபும் பொதுத்தன்மையும் விரித்துக் கூறப்படுவன விரி உவமை எனப்பட்டன; தொக்கு வருவன தொகை உவமம் எனப்பட்டன.

பிறைநுதல்-நற். 120/7... தொகை உவமை; தளிரேர் மேனி-நற்.251/7... உருபு விரிக்கப்பட்டது: வேய்மருள் பணைத்தோள். -பத். 225 உருபும் தன்மையும் விரிக்கப்பட்டன.

7. இவ் வெளிப்படை உவமங்களே அன்றி உவமையே பொருளாகி ஒன்றிவிட்ட நிலை உள்ளது. அதனை உருவகம் என்பர். உவமையினின்று வடிவால் இவ் உருவகங்கள் மாறுபட்டு விளங்குகின்றன. சங்க இலக்கியத்தைப் பொறுத்த வரை உருவகங்கள் அருகியே வழங்கின எனலாம். உவமையின் பயில்வு மிகுதியால் ஒரு சில உருவகங்கள் ஆகிவிடுகின்றன எனக் கூறலாம். உவமை முதல் நிலை: அதன் முற்றிய நிலை உருவகமாகும். உவமையின் ஒருவகையே உருவகம் எனினும் வடிவால் வேறுபடுதலின் அதனைத் தனியே ஒர் அணியாகக் காட்டவேண்டியுள்ளது.

8. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனச் செய்யுளின் பொருளியல் பிரித்து உணரப்படுகின்றது. முதற் பொருளுக்கும் உரிப்பொருளுக்கும் கருப்பொருள் துணை செய்கிறது. அகப்பொருட் பாடல்களுள் வரும் கருப்பொருட் செய்திகளினின்று உவமச் செய்திகள் ஒரு சில வெளிப்படு கின்றன. இவற்றினின்று பெறப்படும் குறிப்புப் பொருளைக் குறிப்புவமம் என்று கூறலாம். கருப்பொருள் செய்திகளிலே இருந்து குறிப்பாகப் பெறப்படும் உவமச் செய்திகளை உள்ளுறை உவமம் என்றனர். இதனை உவமப்போலி என்றும் கூறினர். இவ் உள்ளுறையைப் போலக் குறிப்பாகப் பெறக் கூடிய மற்றோர் பொருளை இறைச்சி என்றும் கூறினர். உள்ளுறை இறைச்சி ஆகிய இவற்றைக் குறிப்புவமைகள் என்று கூறலாம். இவற்றின் தனிச்சிறப்பை ஒட்டி இவை தனித் தலைப்புகளில் ஆராயப்படுகின்றன:

1. இந்நூலின் மூன்றாவது தலைப்பில் ஆராயப்படுகின்றது. 2. இந்நூலின் பத்தாவது தலைப்பில் ஆராயப்படுகின்றது.