பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சங்க இலக்கியத்தில் உவமைகள்

அதனைக் கலைத்துக் கீழே இருந்து நக்கியதைப் போலக் காதலர் தமக்கு அருள் செய்திலர் எனினும் தான் அவரைப் பல முறையும் காணுதலும் உள்ளத்துக்கு இனிமை தருகிறது என்று ஒரு தலைவி கூறுவதாகப் பாடப்படுகிறது.

குறுந்தாட் கூதலி ஆடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவார் ஆயினும் பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.

-குறு. 60/1-6

1.4. சேய்மைக் காட்சிகளை உவமைகளாக அமைத்தல்

பொதுவாக உவமைகளும் பொருளும் பெரும்பாலும் அண்மைக் காட்சிகளாகவே அமைவனவாகும். வேப்பம் முகைக்கும் நொச்சியின் முகைக்கும் நண்டின் கண் உவமைப் படுத்தலும், யானையின் கால்கள் உரலுக்கு உவமைப் படுத்தலும் வெறும் அண்மைக் காட்சிகளே எனலாம். தன்மை உவமை அணி என்னும் தலைப்பில் காட்டப்பட்டவை அனைத்தும் அண்மைக் காட்சி உவமைகள் என்றே கூறலாம். ஒரு சில காட்சிகள் சேய்மையிலிருந்து கண்டு அவற்றிற்கேற்ற உவமை களைக் கூறியுள்ளனர்.

1.4.1 கல்லை அலைத்து ஒழுகும் வேகமான அருவி அழகிய காட்சியாகும். இஃது சேய்மையில் இருந்து காணும் காட்சியாகும். இதற்கு நிலத்தில் ஊர்ந்து செல்லும் பாம்பு உவமை தரப்படுகிறது. நிலத்தில் ஊர்ந்து செல்லும் பாம்பும் சேய்மையில் இருந்து காணப்பட்ட காட்சியாகும்.

கல்பொருது இரங்கும் கதழ்விழ் அருவி

நிலம்கொள் பாம்பின் இழிதரும்

விலங்குமலை நாடன். -குறு. 134/5-7

1.4.2. மலைவீழ் அருவி பாம்பின் தோலுக்கு உவமைப் படுத்தப்பட்டுள்ளது. ஈண்டும் சேய்மைக் காட்சிப் பொருள் களாகவே இரண்டும் அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

செவ்வரைக் கொழிநீர் கடுப்ப அரவின் செவ்வரி உரிவை. -அகம்.327/12-13