பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் f 15

1.6.3. முழந்தாள் அளவு வளர்ந்த சிறு யானைக் கன்று குறமகளின் குடிசையின் புறம் வந்து புதல்வரோடு பொருந்தி விளையாடி இனிமை செய்தது; அதுவே பின் அவர்களுடைய தினைப்புனத்தையே மேயத் தொடங்கித் துன்பம் விளை வித்தது. இவ்வாறு தலைவனின் நகை விளையாட்டு முன் இன்பமும் பின் துன்பமும் செய்தது எனக் கூறப்படுகிறது.

முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி நறவுமலி பாக்கத்துக் குறுமகள் ஈன்ற குறியிறைப் புதல்வரோடு மறுவந்து ஒடி முன்நாள் இனியது ஆகிப் பின்நாள் அவர் தினைப் புனம்மேய்ந் தாங்கு பகைஆகின்று அவர் நகைவிளையாட்டே.

-குறு. 394/1-6

இச் சான்றுகள் மூன்றும் உவமை வடிவில் அமைந்த சிறுகதை நிகழ்ச்சிகளாகும். சிறுகதை வடிவம் அமைந்த இவ் உவமைகள், பல அரிய தத்துவங்களையும் நீதிகளையும் வாழ்வியலையும் உணர்த்துகின்றன. கதைகளின் நோக்கமே வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதாகும். அந்நிலையில் இவ் உவமைக் கதைகள் அமைந்திருப்பது உவமஇயலில் காணப்படும் தனிச் சிறப்பாகும்.

1.7. பழமொழிகளை உவமையாக அமைத்தல்

பலரும் போற்றும் வாழ்க்கை உண்மைகளும் அனுபவச் செய்திகளும் பழமொழிகளாக இயங்குகின்றன. அத்தகைய பழமொழிகள் ஒரு சில உவமச் செய்திகளுள் இடம் பெற்றுள்ளன.

1.7.1. வழிபடும் தெய்வத்தைக் கண்ணிலே கண்டது போல என்பது பழமொழியாகும். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்னும் இக்காலப் பழமொழியோடு இஃது ஒத்து விளங்குகிறது.

வழிபடு தெய்வம் கட்கண்டா ஆங்கு. -நற். 9-2

1.7.2. வெந்த புண்ணில் வேல் நுழைந்தது போல, என்னும் பழமொழி இப்பொழுதும் வழங்கும் ஒன்றாகும். இப் பழமொழி சங்க இலக்கிய உவமையில் வழங்கி வந்துள்ளது

1. நற். 97/1-4; கலி. 83/30-31, 84/30, 120/18