பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 117

குறுந்தாட் கூதலி ஆடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கியாங்கு -குறு. 60/1-4

1.7.8. தச்சன் செய்து கொடுத்த சிறு தேரைச் சிறுவர்கள் ஊர்ந்து இன்புறார் ஆயினும் அதனைத் தள்ளி இன்பறுவர என்பது குழந்தைகள் மனநிலையைக் கொண்டு உணர்த்தும் பழமொழிச் செய்தியாகும்.

தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்து இன்புறா அர் ஆயினும் கையில் ஈர்த்து இன்புறுஉம் இளையோர் போல -குறு. 61/1-3

1.7.9. 'புலி வலையில் நரி அகப்படுதல் போல’ என்பது பழமொழிச் செய்தியாகும். பெரிய புலியைக் கொள்வதற்காக வைக்கப்பட்ட வலையில் வழியில் காரணமில்லாமல் செல்லும் குறுநரி அகப்பட்டதுபோல் என்னும் செய்தி உவமையில் அமைந்துள்ளது.

இரும்புலி கொள்மார் நிறுத்த வலையுள் ஒர் ஏதில் குறுநரிபட்டற்றால் -கலி, 65/24-25

1.7.10. கொற்றிக்குப் பேய் நொடித்தல்' என்பது பழமொழியமைப்பைக் கொண்டதாகும். ஏற்கனவே எல்லாம் தெரிந்த காடுறை தெய்வமாகிய கொற்றவைக்குப் பேய் சொல்லிக் கொடுத்தல் என்பது மிகைபடக் கூறலாகும். இச் செய்தி உவமத்தில் இடம்பெற்றுள்ளது.

பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு

-கலி, 86/8

துணங்கை அம்செவிக்கு அணங்குநொடித் தாங்கு

-பத். 4/459

1.7.11. இரு பக்கமும் பற்றி எரியும் நெருப்புக்கு இடையே வருந்தி ஒரு பக்கமும் செல்ல இயலாத எறும்பின் நிலை உவமச் செய்தியில் இடம் பெறுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பு போல’ என்னும் பழமொழி நாட்டில் இப்பொழுதும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.