பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சங்க இலக்கியத்தில் உவமைகள்

8. சங்க இலக்கிய உவமைகளின் பொருள் மரபுகள்

1. சங்க இலக்கிய உவமைகள் ஒரு சில குறிப்பிட்ட பொருள் மரபுகளைக் கொண்டு விளங்குகின்றன. உவமச் செய்திகளில் அக்காலத்து மக்களின் எண்ண நினைவுகளும் புலவர்களின் மன நிலையும் புலனாகின்றன. இவ் உவமச் செய்திகளின் பொருள் மரபுகளின் சிறப்பியல்புகளைக் கீழ்வரும் தலைப்புகளில் அமைக்க இடம் தருகின்றது.

1. உவமையில் இயற்கை. 2. உவமையில் அகப்பொருள் புறப்பொருள் செய்திகள் 3. உவமையில் கலைச் செய்திகள் 4. உவமையில் அறவியல் செய்திகள்

5. உவமையில் கடவுளர் செய்திகள்

1.1. உவமையில் இயற்கை

இயற்கையை இரண்டு வகைப்படுத்திக் காண்பர். நிலமும் பொழுதும் ஆகிய இவற்றை முதற்பொருள் என்பர். ஏனைய விலங்குகள், பறவைகள், செடிகொடி வகைகள் இவற்றைக் கருப்பொருள் என்பர். இது முதல் வகை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன நிலப் பிரிவுகள். காலத்தைப் பெரும்பொழுதும் சிறுபொழுதும் என இருவகைப் படுத்துவர். மற்றும் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய இவற்றை ஐம்பெரும் பூதங்கள் என்று கூறும் வழக்கும் உள்ளது. இவ்ஐந்துமே அன்றி விண்ணில் இயங்கும் ஞாயிறு, திங்கள், நாள்மீன், கோள்மீன், மழை, மின்னல் முதலியனவும் இயற்கைப் பொருள்கள் ஆகும். இடம் நிலைத்து நிற்பது. காலம் அதற்குத் துணை செய்வது. இவற்றை முதலாகக் கொண்டு உலகத்து உயிர்ப் பொருள்கள் தோற்றம் பெறுகின்றன. இவற்றைக் கருப்பொருள் என்பர். இதுவே கருப்பொருளுக்கும்