பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை இறைச்சி 173

7. சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும்

1. உள்ளுறை இறைச்சி பற்றி ஆராயத் தொல்காப்பியச் சூத்திரங்கள் வழிகாட்டுகின்றன. தொல்காப்பியம் இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்களைத் தருகின்றது எனினும் அவற்றின் கருத்துகளை அறிவதற்கு உரையாசிரியர்களின் உரை தேவைப்படுகிறது. இவ் இரண்டையும் வைத்துக் கொண்டே உள்ளுறை இறைச்சி ஆகிய இவற்றின் அடிப் படையை உணர வேண்டியுள்ளது. தொல்காப்பியச் சூத்திரங் களுக்கு மாறுபட்ட உரைகளும் கருதுவது வேறு. அதனால் எது முடிந்த கருத்து என்றும் கூறுவது எளிதன்று. இவற்றை மரபு வழிச் செய்தியாகக் கொண்டு இவற்றின் வழி நின்று உள்ளுறையையும் இறைச்சியையும் பற்றி அறிய வேண்டி யுள்ளது.

2. மற்றும் பாடல் பகுதிகளில் எவை உள்ளுறைப் பகுதிகள், எவை இறைச்சிப் பகுதிகள் என்று கோடிட்டுப் பிரித்து அறிவது அரிய முயற்சியாகும். கொள்வோர் எந்தப் பகுதியை யும் இவற்றிற்கு நிலைக்களனாகக் கொள்ளலாம். எனினும் இவற்றைப் பற்றி மரபு வழிச் செய்திகளை அறியப் பழைய உரையாசிரியர்கள் காட்டும் பகுதிகள் அல்லாமல் ஏனைய பகுதிகளையும் உள்ளுறை இறைச்சிக்கு நிலைக்களனாகக் கொள்ளலாம். எனினும் இவ்வாறு உள்ளுறை இறைச்சியாகக் கொள்வதற்குச் சில அடிப்படைகள் காணப்படுகின்றன. அவற்றையே உரையாசிரியர்கள் நிலைக்களனாகக் கொண்டு உரைக் குறிப்புத் தந்துள்ளனர். இவ்வாய்வு அவர்கள் உரை வழி நின்று கொள்ளப்படும் செய்திகளையே தருகிறது. அவர்கள் குறிப்பிடும் பகுதிகளே ஈற்றில் பின்னிணைப்பாகத் தொகுத்துச் சேர்த்துத் தரப்பட்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வில் ஒரு சில அரிய செய்திகள் தரப் படுகின்றன.

3.தொல்காப்பியச் சூத்திரங்களும் அவற்றிற்குத் தரப்படும் உரை விளக்கங்களும் கொண்டு கீழ்வரும் செய்திகளை அறிய முடிகின்றது.