பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சங்க இலக்கியத்தில் உவமைகள்

12.9. தடுமாறு உவமை

ஒரே இடத்தில் பொருளுக்கு உவமை தரப்பட்டு மீண்டும் அவ்வுவமை பொருளாகவும் தோன்ற அமைக்கும் புதிய அழகைச் சில புலவர்கள் தோற்றுவித்துள்ளனர். இதனைத் தடுமாறு உவமம் என்று கூறல் பொருந்தும். இஃது ஐய உவமையோடு நெருங்கிய தொடர்பு பெற்றுள்ளது. இதனைத் தொல்காப்பியர் தடுமாறு உவமம் என்றும், தண்டி ஆசிரியர் இதரவிதர உவமை என்றும் கூறுவர்.

12.9.1. நற்றிணையில் இத்தடுமாறு உவமம் நகைச் சுவையோடு இயங்கி வருகிறது. தும்பியாகிய வண்டு ஒன்று நாவற்பழத்தைத் தன் இனமாகக் கருதி அதனை மொய்க்கிறது. அந்தத் தும்பியை நாவற்பழத்திற்கும் நாவற்பழம் தும்பிக்கும் உவமைப்படுத்தும் தடுமாற்ற அழகு இடம் பெற்றுள்ளது.

புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழம்செத்துப் பல்கால் அலவன் கொண்ட கோட்டு ஊர்ந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் - நற்.35/2-5

12.9.2. யாழும் வண்டும் குழலும் தும்பியும் முழவும் அருவியும் தம்முள் மாறி மாறி ஒலித்தன என்றும், விறலியர் கொடியைப் போலவும் கொடி விறலியரைப் போலவும் விளங்கினர் என்றும், மயில் பாடினியைப் போலவும் பாடினி மயிலைப் போலவும் ஆடினர் என்றும் பரிபாடலில் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு தடுமாறும் நிலையில் பரிபாடல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.

கலைக்கும் இயற்கைக்கும் தடுமாற்றம் ஏற்படுத்தி வைக்கின்றது.

ஒருதிறம் பாணர் யாழில் தீங்குரல் எழ

ஒருதிறம் யாணர் வண்டின் இமிரிசை எழ

ஒருதிறம் கண்ணார் குழலின் கரைபு எழ

ஒருதிறம் பண்ணார் தும்பி பரந்துஇசை ஊத

1. தடுமாறு உவமம் கடிவரை யின்றே - தொல். 310. 2. இதரவிதர உவமை என்பது பொருள் ஒருகால் உவமையாகவும்

உவமை ஒருகால் பொருளாகவும் ஒரு தொடர்ச்சிக்

கண்ணே வருவது. - தண்டிஉரை. 44