பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சங்க இலக்கியத்தில் உவமைகள்

'திண்ணிய தேர்களை இரவலர்க்கு அளித்த ஆய் அண்டிரன் வருகின்றான் என்பதற்காக வச்சிரத்தடக்கையோன் ஆகிய இந்திரனின் இருப்பிடத்தில் முரசும் கறங்க விசும்பில் ஆரவாரம் எழுந்தது என்று கூறப்படுகின்றது”.

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார் அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசங் கறங்க ஆர்ப்பு எழுந் தன்றால் விசும்பி னானே. -புறம். 244/15

12.10.2. இனிய தலைவியைப் பிரிந்த தலைவனைத் தேடித் தருவது போல இருக்கிறது மழை எழுப்பும் பேர் ஒலி என நற்றிணைப் பாடல் ஒன்று கூறுகிறது. மழையின் பேர் ஒலி இயல்பான நிகழ்ச்சி. அதனோடு தலைவனைத் தேடித்தரும் செய்தி பிணைக்கப்படுதல் புலவனின் கற்பனையாகும்.

இன்துணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் இப் பெருமழைக் குரலே

-நற். 208/11-12

12.10.3. ஊடியிருந்தவரைக் கூடி மகிழுமாறு கூவி யழைப்பது போலக் குயில் கூவுவது இருந்தது என மற்றொரு நற்றிணைப்பாடல் கூறுகின்றது.

பொதும்புதோறு அல்கும் பூங்கண் இருங்குயில் கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கைவிட்டு அகறல் ஒம்புவின் அறிவுடையிரெனக் கையறத் துறப்போர்க் கழறுவபோல் மெய்யுற இருந்து மேவரதுவல. -நற். 343/4-8

ஏனைய நூல்களிலும் இவ்வணி பயின்று வந்துள்ளது.

12.11 திரிபு உவமை அல்லது விகார உவமை

உவமையைத் திரித்துப் பொருளுக்கு ஏற்றவாறு அமைக்கும் உவமையும் காணப்படுகிறது. இதனைத் திரிபு உவமை எனலாம். தண்டியலங்காரம் இதனை விகார உவமை என்று கூறும்.

1. பிற்குறிப்பு 4-இல் காண்க. 2. விகார உவமை என்பது ஒர் உவமையை விகாரப்படுத்தி உவமிப்பது

- தண்டி. பக்கம் 48