பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சங்க இலக்கியத்தில் உவமைகள்

2. உவம உருபுகள்

1. உவமையையும் பொருளையும் இணைக்கும் சொற்கள் உவம உருபுகள் எனப்பட்டன. அவை முழுச் சொற்களாகவும், தனி உருபுகளாகவும் விளங்கின. இவை உவமையையும் பொருளையும் இணைத்து நின்றன. சில தொடர்களில் இவ்உருபுகள் இல்லாமலேயே அவை இணைந்து நின்றன. அவற்றை உவமைத் தொகைகள் என்பர். எனவே உவம உருபு தொக்கும் தொகாமலும் உவமையும் பொருளும் இயைந்து நின்றன எனலாம். தொக்கு நிற்பனவற்றைத் தொகை உவமை என்றும் விரிந்து நிற்பனவற்றை விரி உவமை என்றும் கூறுவர்.

2. பிறை நுதல் (நற். 66/11) என்பது தொகை உவமமாகும். பிறை என்பது உவமை, நுதல் என்பது பொருள். பிறை என்பது துதலுக்கு அடையாக நின்று அதன் வடிவச் சிறப்பைக் காட்டுகின்றது. பிறை போலும் வளைந்த நுதல் என்ப பொருளாம்.

3. பூப்போல் உண்கண்' (நற்.20/6). இதில் பூ என்பது உவமையாகும் கண் என்பது பொருள் போல் என்பது இவ்விரண்டையும் இணைக்கும் சொல்லுருபாகும். போல, ஒரு காலத்தில் முழுச் சொல்லாக இருந்திருக்கும். அது வழக்கிடை பயின்று உருபு நிலையை அடைந்துவிட்டது. போல் என்பது வினை விகுதியோ இடைநிலைகளோ சேராத வெறும் அடிச் சொல்லாகும். இது உவம உருபு என்றும், இடைச் சொல் என்றும் கொள்ளும் நிலையைப் பெற்றுள்ளது. -

4. கார் மழை முழக்கிசை கடுக்கும்' (அகம். 14/20) கார் காலத்து மழை முழவின் இசையை நிகர்க்கும் என்பது இத் தொடரின் கருத்தாகும். கடுக்கும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று எனக் கொள்ளல் தகும். 'செய்யும்' என்னும் அமைப்பை உடைய இம்முழு வினைச்சொல் உவம உருபாக நின்றுள்ளது. எனவே முற்று வினையே உவம உருபாக நின்றது என்று கொள்ளலாம்.