பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருபுகள் வரும் இடங்கள், உவமைகள் வரும் பகுதிகள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

இவ்வாய்வுக்கு அடிப்படையாக விளங்கிய நூல்களின் பட்டியலும் துணையாக அமைந்த நூல்களின் பட்டியலும் இறுதிப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாய்வில் விளக்கவியல் முறையே பின்பற்றப்பட்டுச் செயதிகள் தரப்பட்டுள்ளன. ஒப்பியல் யாண்டும் மேற் கொள்ளப்படவில்லை. ஒப்பியல் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு வரையறையே செய்ய இயலாது என்பதால் ஒப்பியல் முறை மேற்கொள்ளப்படவில்லை. இலக்கியங்களைப் பற்றிய செய்திகள் மட்டும் இதில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பிய மரபினைச் சங்க இலக்கியம் பின்பற்றுவதால் ஆங்காங்குத் தொல்காப்பிய அடிப்படைகளைக் கொண்டு சங்க இலக்கிய உவமவியல் ஆராயப்பட்டுள்ளது.

அடிக் குறிப்புகளிலும், பிற்குறிப்புகளிலும், பின்னிணைப்புகளிலும் செய்யுள் எண்ணும் வரியும் தரப் பட்டுள்ளன. நூல்களின் முதல் சில எழுத்துகளால் நூற் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு நூல்கள் மட்டும் பத் 1, பத் 2, பத் 3 என எண்களால் குறிக்கப்பட்டுள்ளன.

இந்நூல் டாக்டர் பட்டத்துக்கு (Phd) சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1971 ஜூலையில் தரப்பட்டது.

ஆய்வுத்துறையில் என்னைப் புகுத்தி, என் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த என் பேரராசிரியர் டாக்டர். மு. வரதராசனார் அவர்களுக்கு மிக்க கடப்பாடுடையேன். இந்நூலை வெளியிட அனுமதி தந்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு என் நன்றி உரித்தாகுக.

- ரா. சீனிவாசன்