பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

யில் மிகப்பெரிய, அரிய ஆய்வுகள் பல செய்து மிகவும் பயன் தரும் புதுப் புதுச் செடிகளை உருவாக்கி வருகின்றனர். பருத்தித் துணி இழைகள், மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டனவாதலின், பருத்தி சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புடையதென்று கே. ஏ. செளத்திரி கூறுவார். மேலும், பழைய உலகப் பருத்தியில் ஆய்வு செய்த ‘எட்சின்சன்’, ‘சைலோ’, ‘ஸ்டீபன்ஸ்’ முதலியோரும் இதனை (1947) வலியுறுத்துவர். எனினும், பருத்தி முதன் முதலில் எந்த நாட்டில் தோன்றிற்று என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆதலின், தண்டமிழ் நாட்டில் தொன்று தொட்டு வளர்க்கப்பட்டு வரும் பருத்தியின் தோற்றத்தையும், இதனுடைய அனாதி முறையான பழமையினையும் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து கண்டு சொல்வதற்குத் தமிழ் மகன் உடனடியாகத் துடித்தெழ வேண்டும்.