பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



x

 எல்லா வகையுங்கொண்ட அனைத்துத் தாவரங்களையும் கண்டு சேமித்து ஆய்ந்து பெயரிட்டுப் பாகுபடுத்தி, இலத்தின் மொழியில் விளக்கவுரை எழுதப்பட்டுள்ளது. அனைத்து நாட்டவர்களும் இவற்றை ஏற்றுக் கொள்ளும்படி சட்டமியற்றியுள்ளனர். இதற்கு அனைத்துலகத் தாவரப் பெயர் முறை விதிகள் (Inter-national Code of Botanical Nomenclature - ICBN) என்று பெயர். அனைத்துலகத் தாவரங்கள் எல்லாம் இலண்டன்–கியூ–நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி எந்த ஒரு தாவரப் பேரினப் பெயரும் ஆங்கிலத் தலைப்பெழுத்தை முதலாகக் கொண்டும். எந்த ஒரு தாவரச் சிற்றினப் பெயரும் ஆங்கிலச் சிற்றெழுத்தை முதலாகக் கொண்டும் எழுதப்பட்டு, அப்பெயர்கள் அடியில் கோடிடப்படுதல் அல்லது சாய்வு எழுத்துக்களால் எழுதப்படுதல் வேண்டும். அத்துடன் இவற்றின் சிற்றினப் பெயரைக் கண்டு சொன்னவரின் பெயர்ச் சுருக்கம் அப்பெயருடன் சேர்க்கப்படுதல் வேண்டும். இம்முறைப்படி எந்த ஒரு தாவரத்திற்கும் பேரினப் பெயரும் சிற்றினப் பெயரும் ஆன தாவர இரட்டைப் பெயர் உண்டு. இப்பெயர்கள் உலகமெல்லாம் ஏற்கப்பட்டு ஒரே மாதிரியாகக் கையாளப்பட்டு வருகின்றன.

மேலும், உலகில் நாள் தோறும் கண்டு பிடிக்கப்படும் எந்த ஒரு தாவரமும் இலத்தீன் மொழியில், முறைப்படி எழுதப்பட்டு இலண்டன்-கியூ நிறுவனத்திற்கனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அவற்றின் உ ண்மையான தாவரப் பெயர்களை எல்லாம் திரட்டி ஐந்தாண்டுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகின்றனர். அப்பட்டியல் நூலுக்கு இன்டெக்ஸ் கியூவென்சிஸ் (Index Kewensis) என்று பெயர். இதுவே உலகின் உண்மையான தாவரப் பெயர்ப் பட்டியல் ஆகும்.

சங்கத் தமிழ் இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களுள் 210 மரம், செடி, கொடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தாவரங்களைப் பற்றி விளக்கம் கூறினோர் இரு சாரார் எனலாம். ஒரு சாரார் இலக்கியப் புலவர்கள். இவர்கள் அவ்விலக்கியங்களில் கூறப்படும் மலர்களையும், மலர்களின் இயல்புகளையும், மலர்கள் உருவாகும் தாவரங்களையும் இலக்கிய நயம் புலப்படும்படியாகச் சங்கப் புலவர்களின் பாக்களுக்கு இலக்கிய உரை விளக்கம் கூறியுள்ளனர். மற்றொரு சாரார் தாவரவியல் அறிஞர்கள். இவர்களில் லஷிங்டன் என்பவர் பண்டைய சென்னை மாநிலத்தில் கண்ட தாவரங்களுக்கெல்லாம்