பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

125

“துய்த்தலை இதழபைங் குருக்கத் தியொடு
 பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
 வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
 தண்தலை உழவர் தனி மடமகள்”

 (வட்டி-கடகப்பெட்டி)-நற். 97 : 5-8

இப்பூ அமைந்த ஒரு சுவையான விளக்கத்தைப் பெரும் பாணாற்றுப் படையில் காணலாம்.

சிற்றுணவில் இடியப்பம் என்பதொன்றுண்டு. அரிசியை மாவாக இடித்து, நூல் இழை போலாக்கி அவிப்பதுதான் இடியப்பம். இதனை வெல்லப்பாகில் இட்டும் உண்பர். பாலில் இட்டும் உண்பர். இதனைக் கூவி விற்போர் ‘கூவியர்’ எனப்படுவர். புற்கென்ற புறத்தையும். வரிகளையுமுடைய குருக்கத்திப் பூவை இடியப்பமாகக் காட்டுகிறார் புலவர்.

காஞ்சி மரத்தைச் சுற்றிப் படர்ந்து குருக்கத்திக் கொடி மிகுதியாகப் பூத்துள்ளது. அப்பூ புன்புறத்தையுடையது. அகவிதழ்களின் விளிம்புகள் இழை போன்றுள்ளன. காஞ்சியின் கரிய அடி மரத்தில் குருக்கத்தி மலர்கள் வெண்ணூலாகப் பூத்திருப்பது, வெல்லப்பாகோடு இடியப்பம் கிடப்பது போன்று காட்சியளிக்கின்றது என்கிறார். மற்று, இன்னொரு காட்சியும் இங்கே தரப்படுகின்றது. மாதவிப் பூங்கொத்திற்கு அடியில் மணற்குழி ஒன்று உளது. அதில் நீர் நிறைந்திருக்கும். பூங்கொத்திலிருந்து மலர்க் குழி நீரில் விழுந்து கிடக்கும் இம்மலர்கள், ‘இடியப்பம் பாலில் வீழ்ந்து கிடப்பது போன்று உள்ளது’ என்கிறார். இக்காட்சியைச் ‘சட்டியிலே கிடந்த அப்பம் பின்பு பாலிலே கிடந்தவை போல’ என்பார் நச்சினார்க்கினியர்.

“குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
 பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
 கார்அகல் கூவியர் பாகொடு பிடித்த
 விழைசூழ் வட்டம் பால் கலந்தவை போல்
 நிழல்தாழ்வார் மணல் நீர்முகத் துறைப்ப”

-பெரும்பா. 375-379


மேலும் குருக்கத்திப் பூந்துணர், நுனி வளரும் இயல்பிற்றாதலின் கோதை போலக் காட்சி தரும். சிலப்பதிகாரத்தில்[1] காப்பியத் தலைவியின் பெயருக்கேற்ப இம்மலர் ‘மாதவி’ எனப்பட்டது.


  1. சிலப்பதிகாரம் 5 : 190