பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

சங்க இலக்கியத்

இளங்கோவடிகள் ‘கோதை மாதவி’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு அடியார்க்கு நல்லார், ‘மாலை போல பூக்கும் குருக்கத்தி’ என்று உரை கண்டார்.

மாதவிக் கொடி, நவம்பர்-திசம்பர் மாதங்களில் இளவேனிற் காலத்தில் பூக்கும். உழவர் மடமகளால் இம்மலர் விற்கப்படுவதால், இதனை மருத நிலப்பூ என்பர். இம்மலரை முருகன் சூடியதாக நச்சினார்க்கினியர் கூறுவர். பெரியாழ்வார்,

“குடந்தைக் கிடந்த எங்கோவே
 குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்”

எனக் கண்ணனுக்காகப் பாடினார். “முல்லைக் கத்திகைப் போது வேய்ந்தனர்” என்பர் திருத்தக்கதேவர்.[1]

ஆசியாவில், வெம்மை மிக்க நாடுகளில் வாழும் மால்பிசியேசி என்னும் இதன் தாவரக் குடும்பத்தில், 3 பேரினங்கள் இந்தியாவில் உள என்பர். இவற்றுள், ஹிப்டேஜ் பேரினத்தில் 5 இனங்கள் இந்தியாவில் வளர்வதாக ‘ஹூக்கரும்’, தமிழ்நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் காணப்படுவதாகக் ‘காம்பிளும்’ சொல்வர். மாதவிக் கொடி இந்தியாவில் வெம்மையானவிடங்களிலும், பர்மா, மலாக்கா, சீலங்கா, சீனா, சாவா முதலியவிடங்களிலும், காணப்படுகிறது. தமிழ் நாட்டில், மாதவியை ஒத்த மற்றொரு வகைக் கொடியும் வளரும். இதனை ஹிப்டேஜ் பார்விபுளோரா (Hiptage parviflora) என்றழைப்பர். இதன் இலைகள், மாதவி இலைகளைக் காட்டிலும் குறுகி நீண்டும், மலர்கள் சிறியனவாகவும் இருக்கும். மாதவிக் கொடி கன்னட மொழியிலும் ‘மாதவி’ எனவே வழங்கப்படுகிறது. உரியா மொழியில் இதனை, ‘மாதவி’ என்றும், ‘மாதபிளோதா’ என்றும் அழைக்கின்றனர். இதனைக் கொண்டுதான், தாவர நூலில் இதற்கு மாடபிளோட்டா என்ற சிற்றினப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.

மாதவிக் கொடி பூத்த சில நாள்களில் மலர்கள் உதிர்ந்து, பூவிணர் பொலிவிழந்து காணப்படும். இந்நிலையில் நின்ற, குருக்கத்திச் செடியைக் கண்ணுற்ற கோவலன், தனது பிரிவினால் நலனிழந்து வாடும் தனது காதற்கணிகை “மாதவியை ஒத்த மாதவியாயினை” என்று தன் உள்ளத்துயரைப் புலப்படுத்துவானாயினன். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=42, 56 என ராய ஆர். பி., மிஸ்ரா என்.பி. (1962) என்போரும், 2n=58 எனப் பால். எம். (1964) என்பவரும் கூறுவர்.


  1. சீ.சிந் : 1208