பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



xi

தாவர இரட்டைப் பெயர்களையும், தமக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் இத்தாவரங்களுக்குரிய தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிப் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளார். ஜே. எஸ். காம்பிள் என்னும் அறிஞர் இத்தாவரங்களின் தாவரக் குடும்பப் பெயர், பேரினப் பெயர், சிற்றினப் பெயர், ஒரு சிலவற்றிற்குத் தமிழ், தெலுங்கு, மலையாளப் பெயர்களைத் தந்து, அவற்றிற்கெல்லாம் ஆங்கிலத்தில் முறைப்படி விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

ஆகவே, தமிழ் இலக்கிய வல்லுநர்கள் இத்தாவரங்களின் தாவரவியல் விளக்கங்களையோ, தாவரவியல் வல்லுநர்கள் தமிழ் இலக்கிய விளக்கங்களையோ கூறினார் அல்லர். இத்தாவரங்களில் ஒரு சிலவற்றிற்கு இற்றை நாளில் ஒரு சிலர் கூறும் தாவரப் பெயர்களையோ, தமிழ்ப் பெயர்களையோ முற்றிலும் ஏற்குமாறில்லை. என்னையெனில், இவர்கள் இத்தாவரங்களைக் கண்ணாற் கண்டு ஆய்ந்து, அவற்றின் பெயர்களைத் தெளிந்து வலியுறுத்துமாறு காண்கிலமாகலின் என்க. ஒரோவழி கூறப்பட்டுள்ளதும் ஏறலெழுத்துப் போல்வதோர் விழுக்காடாகும்.

பொதுவாக, சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள தாவரங்களின் பெயர்களைக் கொண்டு, அவற்றின் தாவரப் பெயர்களைக் கணித்தல் அரிது. இத்தாவரங்களை இந்நாளில் வெவ்வேறிடங்களில் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றனர். ஒரு சில பண்டைய தாவரங்கள் தமிழ்நாட்டில் அருகியொழிந்தனவா என்ற ஐயமும் எழுகின்றது. ஏனெனில், அனைத்துலக இயற்கை உயிரினப் பாதுகாவலர் சங்கத்தின் மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 20,000 தாவரச் சிற்றினங்கள் இம்மண்ணுலகத்திலிருந்து மறைந்து வருகின்றன என்பர்.[1]

மேலும், பண்டைக் காலத்துப் புலவர்கள் கூறிய தாவரப் பெயர்களைப் பிற்காலத்துப் புலவர்கள் உலக வழக்கியல்பு கொண்டு மாற்றியுள்ளனர். இன்னும் சங்கப் பாடல்களுக்கு உரை எழுதியவர்களும் இத்தாவரப் பெயர்களை விளக்குமிடத்து முரண்படுகின்றனர். அன்றியும், சங்க காலந்தொட்டே ஒரே தாவரத்திற்கு வெவ்வேறு பெயர்களும் வழங்கி வந்துள்ளன. அப்பெயர்களும் இந்நாளில் வழக்கொழிந்து போயின. இதுகாறும்


  1. Plant Research and Development (1975) : Vol : 1 : p-103.