பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



xii

இத்தாவரங்களுக்கு விளக்கம் எழுத முற்பட்டோர் எல்லோரும் செவி வழிச் செய்தி கொண்டும், பிறரைக் கேட்டும், தமக்கு முன்பு யாரேனும் எழுதியுள்ள குறிப்புகளைக் கொண்டும் பெயரிட்டு விட்டனர். எவருமே இத்தாவரங்களைக் கைக்கொண்டு, ஆய்ந்து தேர்ந்து, அவற்றின் உண்மைப் பெயர்களைக் காணவில்லை என்பது தேற்றம். அதனால் ஒரு சங்க இலக்கியத் தாவரத்திற்கு, இந்நாளைய தாவரவியல் கோட்பாடுகளுக்கேற்ப, அதனுடைய உண்மையான தாவரப் பெயரைக் காண்பது அத்துணை எளியதாக இல்லை. ஆகவே, சங்கத் தமிழ்ச் சான்றோர் கூறும் மரம், செடி, கொடிகளைப் பற்றி அன்னோர் தரும் சிற்சில குறிப்புகளைக் கொண்டு, தாவரவியல் அடிப்படையில் இந்த ஆய்வு விளக்கம் எழுதுவது இன்றியமையாது வேண்டப்பட்டது.