பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



189

பல சூல்கள் இரண்டு வரிசைகளாக இணைந்துள்ளன-என்று கண்டோம். இரு வரிசையாக உள்ள சூல்கள் ஒவ்வொரு சூலக இலையின் இரு விளிம்புகளில் காணப்படுகின்றன என்றும், இந்த மூவிலைச் சூலகத்தில் உள்ள மூன்று சூல் ஒட்டுத் திசுக்களும் மூவிலைச் சூலகங்களின் விளிம்புகள் உள் மடிந்து இணைந்த பகுதிகளே என்றும், அதனால் இதன் சூல் ஒட்டுத் திசுக்கள் சூலகத்திற்கு வேறுபட்டவை என்றும், உட்பட்டவையன்று என்றும், சூலகத்தின் அடியில் உள்ள இக்கிண்ணம் போன்ற பகுதி சூலக அறையாகுமென்றும், இவ்வகை அமைப்பு தாவர வகைப்பாட்டியலுக்குப் பெரிதும் துணை புரிதலின் வெறும் புறவியல் அமைப்பு எனக் கோடல் கூடாது என்றும் கூறுவர்.

பெஸ்சி (Bessy) என்பவர் இக்குடும்பத்தை ரோடியேலீஸ் பகுதியில் சேர்த்தார். வெட்ஸ் டீன் (Wettstein) சிறிது ஐயப்பாட்டுடன் ரெசிடேசீ குடும்பத்திற்குப் பக்கத்தில் வைத்தார். ஹட்சின்சன் (Hutchinson) இதனைக் கப்பாரிடேசீ குடும்பத்தில் சேர்த்தார். முருங்கை மலரின் சூலக அறையின் அமைப்பை அறியாத டட்டாவும், மித்ராவும் (1947) இக்குடும்பம் வயோலேசீ குடும்பத்துடன் நெருங்கிய ஒற்றுமை உடையதென்றனர்.

பயன் : இதன் இலையும், காயும் உணவாகப் பயன்படும். இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் ‘பென்’ என்ற ஓர் எண் ணெய் உணவில் சேர்க்கப்படும். இந்த எண்ணெய் உலர்வதில்லை. மரத்தின் பட்டை, வேர் முதலியவை மருந்துக்குப் பயன்படுமென்பர்.

இனி, சங்க நூல்கள் ‘முருங்கை’ மரத்தைப் பற்றிக் கூறுவதைக் காண்போம்.

முருங்கை மரத்தின் வெள்ளிய பூக்கள், கடுங்காற்றில் அடிபட்டுக் கடல் அலையின் நீர்த் துளிகள் சிதறுவன போன்று உதிர்வதைக் குறிப்பிடுகின்றார் அகநானூற்று முதற்பாடலில் மாமூலனார். இவரே மற்றொரு பாடலில் இதன் பூக்கள் ஆலங்கட்டி மழைத் துளி போல் உதிரும் என்பார். நீரில்லாது வறண்டு போன நிலத்தில், உயர்ந்த முருங்கை மரம் வெள்ளிய பூக்களோடு நிற்குமென்பார் சீத்தலைச் சாத்தனார். இம்மூன்றும் அகநானூற்றில் பாலைத் திணையைக் குறிக்கும் பாடல்கள். ஆதலால், முருங்கை மரம் பாலை நிலத்திற்குரியது என்றாயிற்று.