பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

சங்க இலக்கியத்

“சுரம் புல்லென்ற ஆற்ற அலங்குசினை
 நாரில் முருங்கை, நவிரல் வான்பூச்
 சூரல்அம் கடுவனி எடுப்ப ஆருற்று
 உடை திரைப் பிதிர்வின் பொங்கி”
-அகம். 1 : 15-18

“நெடுங்கால் முருங்கை வெண் பூத்தாஅய்
 நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை”
-அகம். 53 : 4-5

மேலும் இம்மரம் பல கிளைகளை விட்டு வளருமென்றும், இதன் கிளைகள் புல்லியன (வலியற்றன) என்றும், நீளமானவை என்றும் கூறப்படுகின்றது. இம்மரம் வலியற்றதென்பதை வலியுறுத்துவது போன்று இதனை ‘நாரில் முருங்கை’ என்றனர். மரங்களில் பொதுவாக நார்த்திசு (Fibres) இருக்கும். அதனால் மரம் வலுப் பெறும். மரம் முதிருங்கால், ‘நார்த்திசு’ வலுப் பெற்று மரத்தில் வைரம் பாயும். முருங்கை மரத்தில் நார்த்திசு இல்லையென்பது தாவரவியல் உண்மை. இதனை மாமூலனார் ‘நாரில் முருங்கை’ என்று குறிப்பிடுகின்றார். கணிமேதாவியாரும் ‘நார் இல் பூநீள் முருங்கை’ என்று கூறுவார். மரத்திலும், கிளைகளிலும் நார்த்திசு இல்லாதபடியால், முருங்கையின் கிளைகள் மிக எளிதாக முறிந்து விடும்.

தலைவியைப் பிரிந்து பாலை வழிச் செல்லத் தலைப்பட்டான் தலைமகன். இவனுடைய செலவுக்கு உடன் படாத தலைமகள், தோழியிடம் சொல்லுகிறாள்:

“கள்ளிசார் கார்ஓமை, நார்இல்பூநீள் முருங்கை
 நள்ளியவேய் வாழ்பவர் நண்ணுபவோ புள்ளிப்
 பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்து ஆண்டு
 இருந்து உறங்கி வீயும் இடம்?[1]

முருங்கை மரம் முறிந்து விழும் இயல்பை மனத்திற் கொண்டு, பாலை நிலத்தில் செல்வோர் நிழல் வேண்டி இதனடியில் ஒதுங்கவும் மாட்டார் என்பது இதனால் அறியப்படும்.

முறியும் இயல்பினால் இம்மரம் முருங்கை எனப் பெயர் பெற்றதென்றும், முருங்குதல் என்பது ‘முறிதல்’, ‘ஒடிதல்’ என்னும் பொருளில் வழங்கப்படுமென்பதற்குச் சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டியும், முருங்கை என்பது தமிழ்ச் சொல்லேயா-


  1. திணைமா. நூ. 91