பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

சங்க இலக்கியத்

“துன்னிணர் பலாசிற் செய்த துடும்பின்” என்ற சீவகசிந்தாமணிப் பாடலில்[1] ‘பலாசின்’ என்பதற்குப் ‘புரசமர’மெனப் பொருள் கூறியுள்ளார். பிங்கல நிகண்டு[2], இதனைப் ‘புரசு’ எனவும் ‘புனமுருக்கு’ எனவும் கூறும். சூடாமணி நிகண்டு[3] ‘பலாசம்’ என்பது புனமுருக்கு என்று கூறும்.

மேலும், கபிலர் குறிஞ்சிப் பாட்டில், (‘பரேரம் புழகுடன்‘)-குறிஞ். 96

‘புழகு’ என்ற பூவினைக் கூறுகின்றார். இதற்கு நச்சினார்க்கினியர் ‘பருத்த அழகினை உடைய மலை எருக்கம் பூவுடனே’ என்று கூறியதோடமையாமல், ‘செம்பூவுமாம்’ என்றும், ‘புனமுருங்கையுமாம்’ என்றும் உரை கூறியுள்ளார்.

இவையன்றி, ‘பொங்கழல் முருக்’கென மிகச் சிவந்த முருக்கு மலர் சங்கவிலக்கியங்களில், அதிலும் அகநானூற்றில் மிகுத்துப் பேசப்படுகிறது. இதுவே, பிற்காலத்தில் புனமுருக்கு, புனமுருங்கை, புரசு, பலாசம் எனப்பட்டது.

இங்ஙனமெல்லாம் பேசப்படும் சங்க இலக்கிய மலர்ப் பெயர்களையும், அவற்றின் இயல்புகளையும் சங்கச் சான்றோர் உவமிக்கு முகத்தான் அறிவுறுக்கும் குறிப்புகளையும், மலர்ப் பெயர்களுக்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கவுரைகளையும், நிகண்டுகளின் விளக்கத்தையும், கலைக்களஞ்சிய உரைகளையும், ஆழச் சிந்தித்துப் பார்த்தால், பலாசம் என்பது புரசு, புரசை, புனமுருக்கு, முருக்கு, புனமுருங்கை, புழகு என்ற பலவேறு சங்க இலக்கிய மரப் பெயர்களால் குறிக்கப்படும் என்று உணரலாம். ‘புரசு’ ஆகிய பலாசம் என்பதைத் தாவரவியலில், பூட்டியா பிராண்டோசா என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதனை (பிளேம் ஆப் தி பாரஸ்டு) (Flame of the forest) ‘காட்டுத்தீ மரம்’ என்பர். மருத்துவ நூல்கள் புரச மரத்தையே பலாசமெனக் கொள்ளும். ‘புரசு’ என்பது ஆற்றுப் பூவரசன்று. ஆற்றுப் பூவரசின் மலர் மஞ்சள் நிறமானது புரச மலர் எரி ஒத்த நிறமுடையது.

இக்காலத்தில் உலக வழக்கில் கூறப்படும் புரச மலர் எரியழல் போன்றது. பலாசமும் இதுவே. இதற்குப் பிங்கலமும், சூளாமணி நிகண்டும் கூறும் வேறு பெயர் ‘புனமுருக்கு’ என்பதாகும். இப்


  1. சீ. சிந் : 834
  2. பி. நிகண்டு : 2661
  3. சூடாமணி நிகண்டு