பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

241

துணை எளிதன்று. ‘வேங்கை மரக்காட்டில் யானைகள் பொருகின்றன. பக்கத்தில் இருந்த வேங்கை மரம் சாய்கின்றது. அதில் பூத்திருந்த பூக்களை, அதன் மேலேறாமலே, குறவர் மகளிர் நிலத்திலிருந்து கொய்து சூட்டிக் கொள்வார்’ என்பதுபட ஒரு குறுந் தொகையுண்டு.

வரைவிடை வைத்துத் தலைமகன் பொருள் வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்ற தோழிக்கு, அவள் ‘யான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும், நொதுமலர் வரையப் புகுவரேல் என் செய்வதென்று ஆற்றேனாயினேன்’ என்றது இப்பாடல்.

“ஒன்றே னல்லேன் ஒன்றுவன் குன்றத்துப்
 பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
 குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
 நின்றுகொய மலரும் நாடனொடு
 ஒன்றேன் தோழி ஒன்றனானே”
-குறுந். 208

இப்பாடலுக்கு இளம்பூரணர் இறைச்சிப் பொருள் கூறுகின்றார். (தொல். பொ. 34) “வரை வெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறு என்னெனக் கவன்ற தோழிக்கு, உடன் போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியது. ஆதலின் இதனுள், பொருகளிறு என்றமையால் தலைமகள் தமர், வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனர் என்பது தோன்றுகிறது. பொருகளிறு மிதித்த வேங்கை, என்றதனால் பொருகின்ற இரண்டு களிற்றினும் மிதிப்பது ஒன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்று கொய்ய மலருமென்றதனால், முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள்பட்டது. இதனால், பண்டு நமக்கு அரியனான தலைமகன் தன்னை அவமதிக்கவும் நமக்கு எளியனாகி அருள் செய்கிறானெனப் பொருள் கிடந்தவாறு காண்க. மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரோடு மலர்ந்தாற் போல யானும் உளனாயினேன் என்றமையின் மெய்யுவமை போலியாயிற்று”.

நக்கினார்க்கினியர் இப்பாடலில் வரும் உவமையை உள்ளுறை உவமமாக்கிப் பொருள் கூறுகின்றார் (தொல்: அகத். 47)

‘இக்குறுந்தொகை பிறிதொன்றன் பொருட்டுப் பொருகின்ற யானையால், மிதிப்புண்ட வேங்கை நசையற வுணங்காது மலர்

 

73-16