இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிண்டி–செயலை–அசோகு
சராக்கா இன்டிகா (Saraca indica, Linn.)
சங்கப் புலவர்களால், பிண்டி எனவும், ‘செயலை’ எனவும் கூறப்படும் அசோகு என்பது ஓர் அழகிய மரம்; என்றும் தழைத்திருப்பது; செவ்விய தளிர்களை உடையது; செக்கச் சிவந்த மலர்களை உடையது. கொத்துக் கொத்தாகப் பூப்பது; தென்னிந்தியாவில் பங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் அருமையாக வளர்க்கப்படுகிறது.
சங்க இலக்கியப் பெயர் | : | பிண்டி |
பிற்கால இலக்கியத்தில் வேறு பெயர் | : | செயலை |
பிற்கால இலக்கியப் பெயர் | : | அசோகு |
உலக வழக்குப் பெயர் | : | அசோகமரம் |
தாவரப் பெயர் | : | சராக்கா இன்டிகா (Saraca indica, Linn.) |
பிண்டி–செயலை–அசோகு
இலக்கியம்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பிண்டி, செயலை என்பன அசோகு என்ற அழகிய மரத்தைக் குறிப்பனவாகும். ‘அசோகு’ என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பிண்டி, செயலை என்ற இரு சொற்களையும் ஆளுகின்றார்.
“பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி”-குறிஞ். பா. 88
“எரிஅவிர் உருவின் அம்குழைச் செயலைத்
தாதுபடு தண்ணிழல் இருந்தன மாக”-குறிஞ். 104-105