பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

267

முடிமன்னர்கள் தமக்குரிய பூக்களைச் சூடுவர் எனினும், நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனக்குரிய வேப்பம் பூவையன்றி, மந்தார மலர்த் தாரைச் சூடும் விருப்பினன் என்பர்:

“மண்டா னிறைந்த பெரும்புகழ் மாறன்
 மந்தா ரமெனும் தண்டாரன்”
[1]

கரிகாற்சோழன், கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையைச் சூடியவன் என்பர் முடத்தாமக் கண்ணியார்.

“கண்ணார் கண்ணி கரிகால் வளவன்”-பெரும். 148

‘மந்தாரம்’, இந்திரனுக்கு மாலையாகுமென்றும், காட்டு மந்தாரை எனப்படும் ‘காட்டு ஆத்தி’ இறைவனுக்குரியதென்றும் கூறுவர்.

“ஆத்திசூடி அமர்ந்த தேவனை”

‘கொக்கு மந்தாரை’ (கொக்கிறகு) என்பது வெள்ளை மந்தாரம் ஆகும்.

‘வெள்ளை மந்தாரம், முல்லை’ என்றார் பிறரும்.[2] இம்மலர் மாலையில் வண்டு ‘காந்தாரம்’ எனும் இசையை முரலும் என்பர் திருத்தக்க தேவர்.[3]

மணிவாசகர், “விரையார் நறவம் ததும்பும் மந்தாரத்தில்
தாரம் பயின்று மந்தம் முரல்வண்டு”

என்றிசைப்பர். [4]

இங்ஙனமெல்லாம் சிறப்பிக்கப்படும் மந்தாரம் ஒரு சிறு மரம் ஆகும். அந்தி மந்தாரை எனப்படும் அந்தி மல்லிகைச் சிறு செடியாதலின் மந்தாரமாதற்கில்லை. ஆகவே ‘காட்டு ஆத்தி’, ‘திருவாத்தி’ என்று கூறப்படும். ‘ஆர்’ என்னும் ஆத்தி மரத்தைக் காடாகக் கொண்ட தென்னார்க்காட்டிலே, இத்திருவாத்தியை, ‘மந்தாரை’ என்று கூறுகின்றனர். இம்மலர், வெளிர் மஞ்சள் நிறமானது. இம்மரம், தாவரவியலார் கூறும் பாகினியா பர்பூரியாவாக இருக்கக் கூடும் என்று துணிய முடிகிறது. இதனை வலியுறுத்துமாப் போல், காம்பிள் என்பவர் பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea, Linn.)என்னும் இச்சிறு மரத்தை ‘மந்தாரை’ எனத் தமிழில் வழங்குவர் என்று கூறுகின்றார்.

 

  1. பாண்டிக்கோவை. 71
  2. திரு. வி. பு : இ.மு.ப. 12
  3. சீ. சிந். 1959
  4. திருவா. 6 : 36