பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

சங்க இலக்கியத்

மாலைகளை அணிந்த பனங்கருக்கு மட்டைகளால் உண்டாக்கப்பட்ட மனச்செருக்கையுடைய குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, மிகுந்த நினைவை உடைய உள்ளத்துள்ள காமநோய் மேன்மேலும் பெருக, இன்னவளால் உண்டாயிற்று இக்காம நோய் என்று யான் கூற, அக்கோலத்தைக் கண்ட இவ்வூரில் உள்ளார் எல்லோர்க்கும் முன்னே நின்று தலைவியினது பழியைக் கூறுவர். இவ்வுண்மையை உணர்ந்தவனாகலின் இவ்விடத்தினின்று போகின்றேன்’ என்று கூறிப் போகின்றான் என்பார் மதுரைக்காஞ்சிப் புலவர்.

“பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
 பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
 பூண்மணி கறங்க ஏறிநாண் அட்டு
 பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
 இன்னவள் செய்தது இதுஎன முன்நின்று
 அவள் பழி நுவலும் இவ்வூர்
 ஆங்குணர்ந்தமையின் இங்கு ஏகுமாறு உள்ளே”

-குறுந். 173


இஃதன்றி இதனை ஆடவர் கண்ணியாகவும், மகளிர் இதனைக் கோதையாகவும் அணிந்து விளங்கியதைக் காணலாம்.

“அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி ”
-கலி. 140 : 7
“களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை
 வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர”

-அகநா. 301 : 14-15


ஆவிரை என்ற செடி தாவரவியலின் சிசால்பினியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. காசியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இதனை உள்ளிட்ட இப்பேரினத்தில், பல சிற்றினங்கள் இந்தியாவில் வளர்கின்றன என்று ‘ஹூக்கர்’ என்பாரும், 20 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாகக் ‘காம்பிள்’ என்பாரும் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=14, 16 என ஜாக்கப் (1940) என்பவரும், 2n=14, 16, 28 என இர்வின், டர்னர் (1960) என்போரும் கூறுவர்.

இது ஒரு நல்ல மருந்துச் செடி என்பர் சித்த மருத்துவ நூலார்.