பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

சங்க இலக்கியத்

தலைவி துன்புறுதலும் அவன் வருந்துணையும் ஆற்றியிருக்குமாறு தோழி கூறுதலும் தமிழ் மரபு. தலைவியை ஆற்றப்புகும் தோழி அவள் ஏற்கும் வண்ணம் தக்க சான்று கூறித் தேற்றுதல் வேண்டும். பருவம் வருமளவும் ஆற்றுவித்த தோழி, அவன் குறித்த பருவ வரவின் கண், இனி ஆற்றுவிக்குமாறு எங்ஙனம் எனக் கவன்று ஒரு சிறு சூழ்ச்சி செய்கின்றாள். பருவங்கண்டழிந்த தலைவியை நோக்கி, ‘இது, அவன் குறித்த பருவமன்று’ எனக் கூறி ஆற்றுதல் வேண்டுமென வற்புறுத்தும் வகையில் எழுந்த பாட்டொன்றுளது. உண்மையில் மிகச் சிறந்த இக்குறுந்தொகைப் பாடலைக் கோவர்த்தனர் நன்கு பாடியுள்ளார்.

“மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
 கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
 பருவம் வாரா வளவை தெரிதரக்
 கொம்பு சேர்க் கொடியிணர் ஊழ்த்த
 வம்ப மாரியைக் காரென மதித்தே”
-குறுந். 66

‘பிரிந்து சென்ற தலைவன், தான் திரும்புதற்குக் குறித்த காலம் இன்னும் வரவில்லை. காலமில்லாக் காலத்தில் பெய்த மழையைக் காரென மதித்து, இக்கொன்றை பூத்து விட்டது. முதுமையில் தட்டுத் தடுமாறி, வழி நடப்போர் போலக் கீழ் நோக்கி வளரும் பூங்கொத்துக்களை உடைய இக்கொன்றை மரம் மிக்க அறியாமை உடையது. ஆதலின் வருந்தற்க’ என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது. இச்செய்யுளில் இயற்கை உண்மையை மறைக்க முனைகின்றது புலவர் உள்ளம். இதனால், பாட்டின் சுவை நலம் சிறிதும் குன்றாது சிறக்கின்றது. இக்கருத்தில் எழுந்த மேலுஞ் சில பாக்களும் உள:

“மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
 பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
 கார்என் றயர்ந்த உள்ளமொடு தேர்வில்
 பிடவமும் கொன்றையும் கோடலும்
 மடவ வாகலின் மலர்ந்தன பலவே”
-நற். 99 : 6-10

“ஏதில பெய்ம்மழை கார்என மயங்கிய
 பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி
 எவன்இனி மடந்தை நின் கலிழ்வே”
-ஐங். 462 : 1-3

இதற்கடுத்த நிலையில் எழுந்த இளங்கீரந்தையார் செய்யுள் பின்வருமாறு.