பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

சங்க இலக்கியத்

ஞாழல் பூ செவ்விய நிறமுள்ளது; ஐயவியன்ன மிகச் சிறிய பூ; பொன்னிறங் காட்டுவது; நறுமணம் உள்ளது; தினையரிசியைப் போன்றது. ஆரல் மீனின் முட்டைகளை ஒத்தது. அம்முட்டைகள் தொகுப்பாக உள்ளபோல ஞாழல் மலர்க் கொத்துமிருக்கும் என்கின்றனர் புலவர்கள்.

“நறுவீ ஞாழல்”-குறுந். 318 : 2

“பொன்வீ ஞாழல்”-அகநா. 70 : :9

“செவ்வீ ஞாழல்”-அகநா. 240 : 1

“சிறுவீ ஞாழல்”-நற். 315 : 6

„ „-குறுந். 328 : 1

“ஐளவின்ன சிறுபூ ஞாழல்”-குறுந். 50 : 1

“நனைமுதிர் ஞாழல் தினை மருள் திரள்வீ”-குறுந். 397 : 1

கடற்கரையின் மணல் மேட்டில் வளர்ந்த ஞாழல் மரத்தின் மலர்கள் உதிர்ந்துள்ளன. நண்டுக் கூட்டம் அவற்றின் மேல் ஓடுகின்றன. அது நண்டுகளின் கால்களால் கோலமிட்டது போன்றுளது. இதனை உவமிக்கிறார் ஒரு புலவர். காய வைத்துள்ள தினையை அழகிய மகளிர் கையால் துழாவுவது போன்றுள்ளது எனறு.

“எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொகுதி
 இலங்கு எயிற்று ஏஎர்இன் நகைமகளிர்
 உணங்குதிணை துழவும் கைபோல் ஞாழல்
 மணங்கமழ் நறுவீ வரிக்கும் துறைவன்”
-நற். 267 : 2-5

இத்துணைச் சிறப்பிற்றாகிய ஞாழல் பூ, புலி நகத்தை ஒத்தது என்று கூறும் கல்லாடம்[1]. இதனை வைத்துக் கொண்டு புலிநகக்கொன்றை என்றார் உ. வே. சா. சேந்தன் திவாகரம் இதற்கு ‘நறவம்’, ‘கள்ளி’ என்ற பெயர்களைக் கூறுகின்றது [2].இவையன்றி, கோவை. இளஞ்சேரனாரும் இது பொன்னாவாரை அன்று என்று குறித்துள்ளார். ஆனால், அந்நூலின் பிற்சேர்க்கையில் ஆங்கிலப் பெயராகக் ‘காசியா சொபீரா’ என்று காட்டப்பட்டுள்ளது. இப்பெயரையே கலைக்களஞ்சியமும் கூறுகிறது.

 

  1. “பொன்று ஞாழல் புலிநகம் கடுக்கும்”-கல்லாடம். 50 : 6
  2. “நறவம் சுள்ளி நாகம் ஞாழல்”- சேந்தன் திவாகரம்.